இதுபற்றி கோவையில் பல மட்டங்களிலும் விசாரித்து அறிந்த தகவல்கள் : சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 120 மாணவ மாணவிகள், ஆறு வேன்களில் ஊட்டி சுற்றுலா செல்லும் வழியில் கோவை வந்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் கிராஸ்கட் ரோட்டில் வேன்களை நிறுத்திவிட்டு, பள்ளி நிர்வாகிகள் ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளனர். அப்போது, பள்ளி மாணவ மாணவியரிடம், இயேசு கிறிஸ்து பற்றிய பிரச்சார துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து, பொதுமக்களிடம் வினியோகிக்கும்படிக் கூறியுள்ளனர். இவ்வாறு மாணவர்களால் வினியோகிக்கப்பட்ட பிரசுரங்களைப் பலரும் வாங்கிச் சென்றனர்.
அந்த வழியாக வந்த கோவையைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணகுமார் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். மதப் பிரச்சார பிரசுரத்தைப் படித்துப் பார்த்த
கிருஷ்ணகுமார், அங்குள்ள மாணவ மாணவிகளிடம் பேசியுள்ளார். "நீங்கள் நெற்றியில் செந்தூரம் வைத்துள்ளீர்கள். பொட்டு வைத்துள்ளீர்கள். ஹிந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தியுள்ள பிரசுரங்களைக் கொடுக்கலாமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள், "நாங்கள் எப்போது டூர் வந்தாலும் இதுபோல் கொடுக்கச் சொல்கிறார்கள்? நாங்கள் என்ன செய்வது?' என்று கூறியுள்ளனர். யூனிஃபார்ம் அணிந்த மாணவ மாணவிகளுடன் அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பள்ளிக்கூட நிர்வாகிகள், கிருஷ்ணகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"இதைப் படி' என்று அவரிடம் மீண்டும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்த
பள்ளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், "இதைப் படித்தாவது இனிமேல் திருந்தி வாழுங்கள். உங்களுக்கெல்லாம் புத்தி வரட்டும்' என்று பேசியுள்ளார். இதையொட்டி வாக்குவாதம் முற்றியது
நடந்த சம்பவத்தைப் பற்றி கிருஷ்ணகுமார் கூறியது : ""மத மாற்றப்
பிரசுரத்தை நான் படித்தபோது, ரிக் வேதம், பாகவத புராணம், மஹாபாரதம்,
உபநிஷதம் உள்ளிட்ட ஹிந்து மத புனித நூல்களைப் பற்றி அவதூறான, பொய்யான விஷயங்கள் அதில் இருந்தன. மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, வாக்குவாதம் நடந்தது. ஆணவமாகப் பேசினார்கள்.
என்னுடன் வந்த ஒருவரை அடித்துவிட்டனர். என்னையும் மிரட்டும் வகையில் பேசினர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஆன்டனி என்பவர், "ஏண்டா முட்டாள் பயல்களா? இயேசு வந்தும் கூட உங்களுக்குப் புத்தி வரவில்லையா?' என்று கேட்டார். அதற்குள்ளாக அங்கு பெரும் கூட்டம் கூட, பொதுமக்களில் பலர், "முதலில் இவர்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புங்கள்' என்று கூற, அதற்குள்ளாக போலீஸும் வந்து சேர்ந்தது. போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்'' என்றார்.
இந்த வகையான மதப் பிரச்சார பிரசுரங்களைக் கண்ட பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும் கொதித்து எழுந்தனர். பி3 கோவை மாநகர காவல் நிலையத்தின் முன்பு கூடினர். பாரதிய ஜனதா மாநிலச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார், வி.ஹெச்.பி. கோட்டப் பொறுப்பாளர் ஆர்.எம். கணேசன், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு கூட, கோவை மாநகரம் பதட்டத்தின் உச்ச கட்டத்தை எட்டியது. இரவு 11 மணி வரை வழக்குப் பதிவு செய்யப்படாமல் சமாதான முயற்சியில் போலீஸார் இறங்கினர்.
இறுதியாக, ஹிந்து முன்னணி நிர்வாகி காடேஸ்வர சுப்ரமணி, போலீஸ் உயர் அதிகாரியிடம், "வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், பந்த் அறிவிப்போம்' என்று கூறினார். அதையடுத்து நள்ளிரவு நேரத்தில் கோவை மாநகர காட்டூர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நிர்மலா பீட்டர், சாலமன், டேவிட், ஆன்டனி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
""கோவை அரசு மருத்துவமனை, மத்திய சிறை, கோவையைச் சுற்றியுள்ள
கிராமங்களில் இதுபோன்ற மதப் பிரச்சாரங்களை கிறிஸ்தவ அமைப்பினர்,
மத மாற்றப் பிரச்சாரமாகச் செய்து வருகின்றனர். போலீஸார் இந்த முறை
நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாரபட்சம்
பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்கிறார் ஹிந்து முன்னணி மாநிலப் பேச்சாளர் எல். சிவலிங்கம்.
பள்ளி மாணவ – மாணவிகளை மத மாற்ற வேலைக்கு உட்படுத்துவதை, இச்சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
"ஹிந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தும் விதமாகச் செய்த பிரச்சாரத்தால் பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும்
கொதிப்படைந்தாலும், கட்டுப்பாடாக அமைதியுடன் போலீஸை அணுகியுள்ளனர். கட்டுப்பாட்டை மீறியிருந்தால் அசம்பாவிதம் ஆகியிருக்கும்'' – என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத் தரப்பின் கருத்தை அறிய, துண்டுப்
பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிஃபோன் நம்பரில் தொடர்பு
கொண்டபோது, சகோதரர் மோசஸ் என்பவர் பேசினார். ""கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் தொடர்பான நோட்டீஸ்களை வினியோகிக்க, பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தியது சரியா?'' என்று அவரிடம் கேட்டதற்கு, ""அதெல்லாம் இல்லை; அது முடிஞ்சு போச்சு'' என்பதையே சகோதரர் மோசஸ் திரும்பத் திரும்பக் கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.