குண்டுவெடிப்பு: பலி 30 ஆனது- சதிகாரன் தெளகீர் படம் சிக்கியது ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 14, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற |
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படும் சதிகாரனின் புகைப்படம் போலீஸ் வசம் சிக்கியுள்ளது.
தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதிகளான கரோல் பாக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ்-1 ஆகிய இடங்களில் நேற்று மாலை 26 நிமிடங்களுக்குள் 5 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து தலைநகரை அதிர வைத்து விட்டது.
முக்கிய மார்க்கெட் பகுதிகள் மூன்று உள்பட ஜன நெரிசல் மிக்க பகுதிகளில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோல் பாக் கப்பார் மார்க்கெட்டில், 6.10க்கு முதல் குண்டு வெடித்தது. இங்கு 7 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கன்னாட் பிளேஸில் உள்ள கோபால்தாஸ் டவர் மற்றும் பாலிகா பஜார் (கேட்1) ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.
கன்னாட் பிளேஸ் குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கிரேட்டர் கைலாஷ்-1 பகுதியில், மார்க்கெட் உள்பட இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன.
2 வெடிக்காத குண்டுகள் மீட்பு:
கன்னாட் பிளேஸ், சென்ட்ரல் பார்க் பகுதியில், வெடிக்காத நிலையில் இருந்த 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. அதேபோல ரீகல் சினிமா அருகே ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
காயமடைந்த அனைவரும் எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவமனை, ஜஸ்ராம் மருத்துவமனை ஆகியவற்றில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் காரணமாக டெல்லியே அதிர்ந்து போனது. தகவல் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த பகுதிகள் போர்க்களம் போல காணப்பட்டன.
காயமடைந்தவர்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தனர். அவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பேற்பு:
இந்த குண்டுவெடிப்புக்கு தாங்களே பொறுப்பு. இன்னும் இது போன்ற சம்பவங்கள் தொடரும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு முன்னதாக, டிவி மற்றும் மீடியா நிறுவனங்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் இ மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். அதில், இன்னும் 5 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை தாக்கப் போகிறோம்.
உங்களது பாவங்களுக்கான மரண மிரட்டலாக இது இருக்கும்.
ஜெய்ப்பூர், அகமதாபாத்தில் நாங்கள் முன்பு தாக்குதல் நடத்தினோம். கடந்த ஆண்டு உ.பியிலும் தாக்குதல் நடத்தினோம். மீண்டும் தாக்குவோம் என அதில் கூறப்பட்டிருந்தது.
முன்பு அகமதாபாத் தாக்குதலின்போதும் இதேபோன்ற இ மெயிலை முஜாஹிதீன் அமைப்பு அனுப்பியிருந்தது. அதில் அல் அர்பி என்பவர்தான் கையெழுத்திட்டிருந்தார். அதேபோல டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான மெயிலிலும் அவரே கையெழுத்திட்டுள்ளார். அவரது முழுப் பெயர் அப்துல் சுபான் உஸ்மான் குரேஷி என்கிற தெளகீர்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான வெடிகுண்டு நிபுணத்துவம் பெற்ற தீவிரவாதிகளை குரேஷி உருவாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் இவர் பிடிபடாமல் உள்ளார். சிமி அமைப்பிலிருந்து பிரிந்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை இவர் தொடங்கினார்.
சமீபத்தில், நாட்டில் நடந்து வரும் முக்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களை இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெளகீர் படம் சிக்கியது:
இந்த நிலையில், தெளகீரின் புகைப்படம் சிக்கியுள்ளது. இதை வைத்து அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமடைந்துள்ளனர். பலரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தீவிரவாதிகள் ஆட்டோவில் வந்து வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அதே ஆட்டோவில் தப்பியுள்ளனர். அவர்கள் சென்ற 5 நிமிடத்தில் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெளகீர் மும்பையின் புறநகர்ப் பகுதியான நயா நகரில் வசித்து வந்தார். தற்போது தலைமறைவாக உள்ளார்.
விப்ரோவின் சேல்ஸ் பிரதிநிதியாகவும் இவர் முன்பு பணியாற்றினார். 1998ல் அந்த வேலையிலிருந்து விலகி, தடை செயய்ப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் (சிமி) சேர்ந்தார்.
வெடிகுண்டுகள் தயாரிப்பில் தெளகீர் நிபுணர் ஆவார். 2001 முதல் இவர் குறித்த தகவல் இல்லை என தெளகீரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தௌகீரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். பின்னர் விட்டு விட்டனர்.
சிமி இயக்கத்தின் தலைவரான சப்தர் நகோரிதான், மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமான சித்திக்கிடம், தெளகீரை அறிமுகப்படுத்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உயர்நிலை குழுக் கூட்டம்:
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர்நிலை குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
Source:http://thatstamil.oneindia.in/news/2008/09/14/india-delhi-blast-toll-rises-to-30.html
No comments:
Post a Comment