Monday, September 29, 2008

கோத்ரா இரயில் எரிப்பு சதிச் செயலல்ல: டெஹல்கா!

thatstamil.com

கோத்ரா இரயில் எரிப்பு சதிச் செயலல்ல: டெஹல்கா!

சனி, 27 செப்டம்பர் 2008( 17:06 IST )

குஜராத் கலவரத்திற்கு வித்திட்ட கோத்ரா இரயில் எரிப்பு சதித்திட்டம்
தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதிச்செயலே என்று நீதிபதி நானாவதி ஆணையம்
அளித்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், அது தற்செயலான
நிகழ்வுகளே என்பது 6 மாதங்களாக தாங்கள் நடத்திய புலனாய்வில்
வெளிப்படுத்தப்பட்டதாக டெஹல்கா இதழ் குற்றம் சாற்றியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெஹல்கா இதழின்
ஆசிரியர் தருண் தேஜ்பால், நானாவதி ஆணையத்தின் விசாரணையில் உண்மைகள்
புறக்கணிக்கப்பட்டு, லஞ்சம் கொடுத்து கூறப்பட்ட சாட்சிகளின்
வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று
கூறியுள்ளார்.

“6 மாதங்களாக நாங்கள செய்த புலனாய்வில் எப்படி உண்மையான சாட்சிகளெல்லாம்
லஞ்சம் அளிக்கப்பட்டு பொய் கூற வைக்கப்பட்டார்கள் என்பதை
வெளிப்படுத்தியிருந்தோம்” என்று கூறிய தேஜ்பால், “2002ஆம் ஆண்டு பிப்ரவரி
27ஆம் தேதி கோத்ரா இரயில் நிலையத்தில் நடந்த சம்பவங்களும், அதனைத்
தொடர்ந்து நடந்த இரயில் எரிப்பும் தற்செயலான நிகழ்வுகளே தவிர, முன்
திட்டமிடப்பட்டவையல்ல. இதில் அரசிற்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ எந்தத்
தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

ஷா விசாரணை ஆணையத்தின் புலனாய்வு அதிகாரியாக இருந்த நோயல் பார்மர்,
தங்களுக்கு தலா ரூ.50,000 கொடுத்து இரயிலை கொளுத்துவதற்கு 140 லிட்டர்
பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள் என்று சாட்சியளிக்குமாறு தூண்டினார்
என்றும், யார் வந்து வாங்கியது என்பதை படத்தை காட்டி நீதிமன்றத்தில்
அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டதையும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய
(அரசு சாட்சி) ரஞ்ஜித் சிங் பட்டேல் கூறியிருந்ததை தேஜ்பால்
சுட்டிக்காட்டினார்.

கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தன்னை நேரில் பார்த்த ஒரு சாட்சியாக யார்
சேர்த்தது என்று தனக்குத் தெரியாது என்றும், தான் சாட்சியாக
சேர்க்கப்பட்டதே இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் தெரியும் என்று
பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு அமைப்பாளர் காக்குல் பதக் தங்கள் புலனாய்வில்
கூறியிருந்ததையும் தேஜ்பால் சுட்டிக்காட்டினார்.

கோத்ரா இரயில் எரிப்பை திட்டமிட்டு நிறைவேற்றியதாக குற்றம்சாற்றப்பட்ட
மெளல்வி உமர்ஜிக்கு எதிராக சாட்சியமளித்த ஜாபிர் பெஹரா எனும் காவல் துறை
சாட்சி, தனது வாக்குமூலத்தை திரும்பப்பெற்றார் என்றும், காவல் துறையின்
மற்றொரு சாட்சியான சிக்கந்தர் சித்திக், கோத்ரா வன்முறையை தூண்டிவிட்டதாக
யாகூப் பஞ்சாபி என்பவருக்கு எதிராக சாட்சியமளித்தார். அதுவும்
திரும்பப்பெறப்பட்டது. அந்த நாளில் யாகூப் பஞ்சாபி இந்தியாவிலேயே இல்லை
என்பது தெரியவந்தது என்றும் கூறிய தேஜ்பால், நானாவதியுடன் விசாரணை
ஆணயத்தின் உறுப்பினராக இருந்த நீதிபதி ஷா பணத்திற்காக அலைகிறார் என்று
குஜராத் மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியா கூறிய வீடியோ
பதிவை தாங்கள் வெளியிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

“கோத்ரா இரயில் எரிப்பு குறித்து நாங்கள் மேற்கொண்ட புலனாய்வில் பதிவு
செய்த வீடியோவை விசாரணை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தோம், ஆனால் எங்களை
விசாரணைக்கு அழைக்கவில்லை” என்று தேஜ்பால் குற்றம் சாற்றினார்.

No comments: