ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்
மலர்மன்னன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712131&format=html
மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது பற்றிக் கருத்துச் சொல்லுமாறு பணிக்கிறார்கள்.
ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கை, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, சூரிநாம் போன்ற பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களையும் தகரம் போன்ற கனிமச் சுரங்கங்களையும் வைத்திருந்த பிரிட்டிஷ் முதலாளிகள் நேரங் காலம் இல்லாமல் அடிமைகளென மிகக் கடுமையாக உழைப்பதற்கு ஏராளமான மனித ஆற்றல் தேவைப்பட்டபோது தானும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹிந்துஸ்தானம் தனது பிரஜைகளை அனுப்பிக் கொடுத்தது. பிழைக்க வழியின்றி, பிறந்த தேசத்தில் பசிக் கொடுமையன்றி வேறு அறியாது தவித்த மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பலவாறு ஆசைகள் காட்டி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனரே யன்றி, விருப்பம் காரணமாக அல்ல. கடலுக்கப்பால் இருப்பது சொர்க்க பூமி என போதையூட்டப்பட்டதாலும் பலர் கப்பல் ஏறினார்கள். இவர்களைத் தவிர பாரம்பரியமாகத் திரைகடல் தாண்டித் திரவியம் தேடுவதைத் தொழிலாகக் கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும், குறிப்பாகத் தஞ்சை, ராமனாதபுரம் மாவட்ட முகமதியரும் , வாணிபம் செய்து பொருள் ஈட்டக் கடல் கடந்து சென்றார்கள். உடலுழைப்பைக் கொடுத்து உயிர் பிழைக்கச் சென்றவர்கள் அனைவருமே ஹிந்துக்கள்தாம். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழர்கள். இவ்வாறு சென்றவர்களில் கணிசமானவர்கள் மலேயாவின் ரப்பர் தோட்டங்களிலும் தகரச் சுரங்கங்களிலும் பாடெடுக்கச் சென்றார்கள். மலேயா ஒரு காலனிய நாடாக இருந்தவரை அவர்கள் தமது சமய நம்பிக்கைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையைத் தொடரத் தடங்கல் ஏதும் இருக்கவில்லை. காலனிய நாடுகள் எல்லாவற்றிலுமே ஹிந்துஸ்தானத்திலிருந்து சென்ற ஹிந்துக்களுக்கு சமயம், கலாசாரம் ஆகியவற்றில் குறுக்கீடு ஏதும் அநேகமாக இருக்கவில்லை. பலவாறான கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளே புகுந்து சபலப்படுத்திக் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யும் தொல்லை மட்டுமே இருந்தது. இப்படிச் சபலத்திற்கு ஆளாகித் தங்களின் பாரம்பரியமான சமய நம்பிக்கையினையும் கலாசார அனுசரிப்பையும் கைவிட்டு மாற்று சமயம் தழுவியவர்கள் சொற்பம்தான். மிகப் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களாகவே நீடித்தனர்.
காலனிய நாடுகளில் எல்லாம் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கிய பிறகுதான் ஹிந்துக்களாகவே நீடித்தவர்களின் வாழ்க்கையில் புயலடிக்கத் தொடங்கியது. இப்போது அங்கெல்லாம் இருந்த ஹிந்துக்கள் இரண்டாவது மூன்றாவது தலைமுறை
யினராகிவிட்டிருந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்து, பிறப்பாலும் அந்த நாடுகளின் பிரஜைகளாகிவிட்டவர்கள் அவர்கள். தமது முன்னோர் நாடான ஹிந்துஸ்தானத்தை அவர்கள் கண்ணால் கண்டதில்லை. அங்கே அவர்களுக்கு வேர்களும் இல்லை.
மலேயா காலனியாதிக்கத்திலுருந்து விடுபட்டு, அங்கிருந்த பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமாரும் சுரங்க அதிபர்களும் சிறிது காலத்திற்குள் இனி இங்கு இருப்பதில் பயனில்லை என முடிவு செய்து வெளியேறியதும் அவர்களின் தோட்டங்களும் சுரங்கங்களும் கை மாறின. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஹிந்துஸ்தானத்திலிருந்து ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களைப் பற்றிக் கவலைப் படாமல் பிரிட்டிஷ் முதலாளிமார்கள் தாயகம் போய்ச் சேர்ந்தார்கள்.
காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் தங்கிப் போன ஹிந்துக்களுக்குத் தமது சமயத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதில் பிரச்சினை தொடங்கியது அந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற பிறகுதான். குறிப்பாகத் தம்மை முகமதிய தேசம் எனவும், பவுத்த தேசம் எனவும் பிரகடனம் செய்துகொண்ட தேசங்களில் ஹிந்துக்களுக்குத் தமது, சமய நம்பிக்கை, பண்பாடு ஆகியவை சார்ந்த விவகாரங்களில் சங்கடம் தலை தூக்கியது. அவர்கள் பகிரங்கமான புறக்கணிப்புகளுக்கு இலக்காகத் தொடங்கியது அப்போதிலிருந்துதான்.
மலேயாவாக இருந்து மலேசியாவென ஒரு சுதந்திர நாடாக மாறிய தேசம் தன்னை முகமதிய தேசமாக அடையாளப் படுத்திக் கொண்ட போதிலும் தொடக்கத்தில் பிற சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அதன் மதச் சார்பு தீவிரப்படலாயிற்று. உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ சமயத்திடம் அதனால் கடுமை காட்ட இயலவில்லை. ஹிந்து சமய மக்கள் சகிப்புத்தன்மை, சமரசப் போக்கு என்றெல்லாம் தமது கையாலாகாத்தனத்திற்கு ஒப்பனைசெய்து தமக்குத் தாமே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதால் வெகு எளிதில் அவர்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, கலாசார வாழ்க்கை ஆகியவற்றுக்கு எங்கும் சோதனை வருகிறது அல்லவா? மலேசிய ஹிந்துக்களுக்கும் அதுதான் நேரலாயிற்று.
மலேசியாவின் பிரஜைகளான ஹிந்துக்கள் அங்கு முகமதியம் அரசின் உறுதுணையுடன் மேலாதிக்கம் செலுத்துவது அதிகரித்ததும் தங்களின் சமய நம்பிக்கையின் அடிப்படை
யிலான வழிபாட்டுத் தலங்களை இழக்கத் தொடங்கியதோடு பொருளாதார ரீதியாகவும் உதாசீனம் செய்யப்படுவதைப் பல காலம் பொறுத்துப் பார்த்துப் பிறகு தமக்கு இவ்வாறான இழப்பு நேர்ந்து வருகின்றமைக்கு அடிப்படைக் காரணம் பிரிட்டிஷ் அரசு, தனது காலனி ஆதிக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கோண்டபோது தம் ஆட்சிக்காலத்தில் அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களின் சமய வழிபாட்டு உரிமைக்கும், கலாசாரப் பாதுகாப்பிற்கும் பொருளாதார உத்தரவாதத்திற்கும் எவ்வித ஏற்பாடும் செய்யாமலேயே போய்விட்டமைக்காக மிகச் சரியாகவே பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அமைதியான பேரணியாகச் சென்று பிரிட்டிஷ் ராணியாருக்கு மனு அளிக்க முற்பட்டு அதன் விளைவாக மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
மலேசிய ஹிந்துக்கள் மலேசிய அரசுக்கு எதிரான பேரணியோ மறியலோ நடத்த முற்படவில்லை. பிரிட்டிஷ் தூதரகத்திற்குக் கருணை மனு அளிக்கத்தான் அமைதிப் பேரணியாகச் செல்ல விரும்பினர். ஆனால் அதற்கு அனுமதி யளிக்கக் கூட மலேசிய முகமதியச் சார்பு அரசுக்கு மனமில்லை. அது பேரணிக்கு அனுமதி மறுத்துத் தடையும் விதித்தபோது, ஹிந்துக்கள் தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முற்பட்டு மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் சிறையில் தள்ளப்பட்டு ஏதோ கொடிய குற்றவாளிகளைப் போல பிணையில் வெளிய வர அனுமதிக்கப்படாமல் பல கடுமையான சட்ட விதிகளின்படி வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் தவித்துக்
கொண்டிருக்கிறார்கள். ஹிந்துக்களுக்கு இனி இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடும் நினைப்பே வரக்கூடாதவாறு நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்கிற ஆங்காரம் மலேசிய முகமதிய அரசுக்கு இருப்பது இதனால் தெளிவாகிறது. இவ்வளவுக்கும் அது தன்னை ஒரு ஜன நாயக நாடு எனக் கூறிக்கொள்கிறது. மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லாக் கீழ்த் திசை நாடுகளையும்போல் ஹிந்து, பவுத்த சமயங்கள் வேரோடியிருந்த தேசந்தான் அது! வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. ஜனநாயகத்தையும் மதச் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கும் நாடாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு முகமதிய தேசமே இவ்வாறு நடந்துகொள்ளுமானால் ஜன நாயகம் இல்லாத, போலி ஜனநாயக முகமதிய நாடுகளில் சிக்கிக்கொண்ட ஹிந்துக்களின் நிலை என்னவாக இருக்கும்?
மலேசிய ஹிந்துக்கள் மிகச் சரியாகவே தங்கள் அமைப்பிற்கு ஹிந்து உரிமைப் போராட்டக் குழு எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஏனெனில் முகமதியராகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களும், திராவிட மாயையில் கிடப்பவர்களும் சமரம் செய்துகொண்டு முன்னேறிவிட்டவர்களும் தமிழர்களாகவும், இந்திய வம்சாவழியினராகவும் இருந்த போதிலும் ஹிந்துக்களுடன் இணையவில்லை. தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் ஹிந்துக்களாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இந்த நுட்பங்களையெல்லாம் அறியாமல், மலேசிய ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரிடம் இங்கே யிருப்பவர்கள் சிலர் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ அடையாளப் படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுவதுபோலக் கட்டாயப் படுத்துகிறார்கள்.
மலேசியப் பிரஜைகளான அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்று அழைத்துக் கொள்வார்களேயானால் அது அவர்கள் இன்னமும் தங்கள் முன்னோர் தேசத்தின் மீது உள்ளூர விசுவாசம் வைத்திருப்பதாகவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுவதற்கு வழிசெய்துவிடும். தமிழர்கள் என அவர்கள் தம்மை மேலும் குறுக்கிக்கொள்வது பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஹிந்துக்களின் அனுதாபம் அவர்களுக்குக் கிட்டாமல் செய்துவிடக் கூடும்.
இன்று உலகெங்கிலும் ஹிந்துக்கள் பலர் சமய நம்பிக்கையுடனும் சமூக உணர்வுடனும் இருந்து வருகின்றனர். ஹிந்து சமயமேகூட சர்வ தேசத் தன்மையடைந்துள்ளது. ஹிந்து சமயத் தத்துவங்களின் சிறப்பையும் இறைக்கொள்கையின் ஆழத்தையும் புரிந்துகொண்டு அதனைப் போற்றுபவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ஹிந்து இயக்கங்கள் பல சர்வ தேசத் தன்மையுடன் வலுப்பெற்று விளங்கி வருகின்றன. ஹிந்துக்கள் இன்று பல்வேறு தேசங்களின் பிரஜைகளாகத் தாம் வாழும் தேசங்களில் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். ஆகவே மலேசிய ஹிந்துக்கள் தம்மை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் ஹிந்துக்கள் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதுதான் நல்லது.
அதன் பயனாக, ஹிந்து சமயம் மிகத் தொன்மையான உயிர்த் துடிப்புள்ள, தத்துவ ஆழம் மிக்க சமயம், ஹிந்து கலாசாரமோ மிகத் தொன்மையான கலாசாரம்; அது அழிந்துவிடலாகாது என்னும் விவேகமுள்ள நாடுகள் பலவும் அவர்களுக்கு ஆதரவு காட்டி கலாசார, சமயச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரும். சர்வ தேச ஹிந்து இயக்கங்களும் அவர்களுக்குத் துணை புரிய முன்வரும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசும் அங்குள்ள நீதி பரிபாலன அமைப்பும் இந்த அடிப்படையில் அவர்களுக்கு உதவ முன்வரக்கூடும்.
ஹிந்து என்கிற அடையாளம் சர்வ வியாபகச் சிறப்பு வாய்ந்தது. இந்திய வம்சாவழியினர் என்கிற அடையாளமோ தங்களுக்குப் பிரஜாவுரிமை தந்துள்ள தேசத்தைக் காட்டிலும் முன்னோரின் தேசத்தையே பெரிதாக நினைக்கும் மக்கள் என்ற கண்டனத்திற்குள்ளாகக்கூடும். அவர்களின் விசுவாசம் குறித்துப் பிறரால் கேள்வி எழுப்பப்படும். தமிழர் என்ற அடையாளமோ ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர் என எல்லையைக் குறுக்கி விடும்.
உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் அந்தந்த தேசங்களின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் தம்மைச் சமய ரீதியாகவும், கலாசார அடிப்படையிலும் ஹிந்துக்கள் என அடையாளப் படுத்திக்கொள்வதே அவர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். கிறிஸ்தவரும் முகமதியரும் தம்மை ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என அடையாளப் படுத்தித் தமது தாய்ச் சமய கலாசாரத்திற்கு உரிமைகொண்டாடுவதில் தவறில்லை. அண்மைக் காலம் வரை பங்களா தேஷ் என இன்று அழைக்கப்படும் கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த முகமதியர் தங்களை அவ்வாறுதான் அடையாளப் படுத்தி வந்தனர். ஹிந்தி ஹை ஹம், ஹிந்தி ஹை ஹம் என்று இக்பால் கூவியது இந்த அடிப்படையில்தான்(பிற்காலத்தில்தான் அவர் பாகிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் ஆனார்). ஹிந்துஸ்தானத்திலிருந்து செல்லும் முகமதியர் ஹிந்தி என்றுதான் முகமதிய தேசங்களில் அடையாளங் காணப்பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அவற்றின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் தங்களை இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதைவிடுத்து, ஹிந்துக்கள் என்று அடையாளப் படுத்திக்கொள்வதுதான் அவர்களுக்கு சர்வ தேச
அந்தஸ்தையும் அவர்கள் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளில் சமயச் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் கேட்டுப் பெற உதவும். இந்திய வம்சாவழியினரான கிறிஸ்தவரும் முகமதியரும் இவ்வாறு சமயத்தின் அடிப்படையில் அங்குள்ள சமுதாய கலாசாரங்களுடன் இரண்டறக் கலந்து பயனடைய முடிகிறது. ஹிந்துக்களும் தங்கள் சமயத்தின் பெயரால் தங்களை அடையாளப்படுத்தி சிறுபான்மைச் சமயத்தவர் என்ற அடிப்படையில் தாம் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளிலும் சர்வ தேச அரங்குகளிலும் கவனிப்பைப் பெற முனைவது நல்லது.
இன்று இந்திய வம்சாவழியினர்தாம் ஹிந்துக்களாக இருப்பார்கள் என்னும் நிலை இல்லை. பல ஐரோப்பியரும் அமெரிக்கரும் பிற நாட்டினரும்கூட ஹிந்து சமய, கலாசார சிறப்புகளை உணர்ந்து தம்மை ஹிந்துக்கள் எனப் பெருமையுடன் அறிவித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment