Wednesday, July 2, 2008

கருணைக் கணபதி.

கருணைக் கணபதி.

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபா லிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

தனக்கே ஒருவன் தலைவனில் லாதான்
தரணியில் மூலா தாரத் திருந்து
அனைத்துயிர் களையும் அருளிக் காப்பான்
அத்வைத சாரம் அவனிடம் விளங்கும்.

பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளை
படைக்கும் படையலில் பெருக்கும் பிள்ளை
பெருமான் முகமே யானை முகம்தான்
பார்க்கப் பார்க்கச் சலிக்கா முகம்தான்.

பஞ்ச பூதமும் பாரும் அனைத்தும்
பிள்ளை யாரிடம் அடைக்கல மாகும்
அஞ்சா நெஞ்சும் அறிவும் ஆற்றலும்
அவனை வணங்கிப் பெறலாம் நாமும்.

தத்துவம் மேவிய அவனது வடிவம்
தலையால் அவனே பிரணவ ஸ்வரூபி
ஐந்தொழில் செய்யும் ஐங்கரங் களுமே
இருசெவி ஆன்மா தனைக்காத் தருளும்.

சோம சூரிய அக்கினி எனுமிவை
முக்கண் களினால் முழுமையில் விளங்கும்
பிரம்ம வடிவமே நாபியில் பொலியும்
பெருமுகம் தானே திருமால் வடிவம்.

அருமை முக்கண் அப்பன் சிவமயம்
அங்கே இடப்புறம் அம்மை வடிவம்
சூரிய வடிவம் வலப்புற மிருக்க
அவனை வணங்குவோர்க் கின்னல் ஏது?

இச்சா சக்தி சித்தியே யாவாள்
கிரியா சக்தி புத்தியே யாவாள்
தத்துவ ஞானச் சக்தி யாகவே
தவக் குமாரன் செயல்படு கின்றான்.

யுகத்தின் முடிவில் சக்திக ளடக்கி
யாவரின் மாணியாய்த் திகழ்வான் கணபதி
மகாபாரதத்தைச் சுழி போட் டெழுதி
மகத்துவம் ஒன்றை உணர்த்திய பிள்ளை.

எல்லாத் தெய்வமும் ஏற்றும் கடவுள்
எங்கள் பிள்ளை எழில் கணபதியே
பொல்லாத் தடைகளைப் போக்கி நமக்குப்
புனிதப் பேரும் படைத்தருள் செய்வான்.

அருகம் புல்லும் எருக்கும் வன்னியும்
அன்பாய்ச் சூட அகமகிழ்ந் திடுவான்
கருத்தாய்த் தலையில் குட்டிக் கொண்டு
தோப்புக் காரணம் போட்டால் நெகிழ்வான்.

தந்தை தாய்க்கும் தம்பிக்கு மவனே
தகவுற காரியம் தானே முடிப்பான்
சிந்தையில் அவனைச் சிறை செய்திடுவோம்
சங்கடம் நீங்கிச் சுகமே பெறுவோம்.

வல்லப கணபதி வல்லமை தருவான்
வறுமை யொழிப்பான் நர்த்தன கணபதி
பொல்லாத் துயரம் நீக்கி அருள்வான்
பலபெயர் கொண்ட பார்புகழ் கணபதி.

ப. இரா. கீதா,
சென்னை.

No comments: