வியாழக்கிழமை, ஜூலை 31, 2008
சென்னை: ராமர் பாலத்தை உடைப்போம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிடிவாதம் பிடிப்பது கலாச்சார தீவிரவாதம் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது, தேசிய பாரம்பரியச் சின்னமான ராமர் பாலத்தை மத்திய அரசு இடிக்காமல் நாங்கள் பாதுகாப்போம்.
தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கூடிய தகுதிக்குள் ராமர் பாலம் வரவில்லை என்று கூறுகிறது மத்திய அரசு. அப்படியென்றால் ராமர் பாலத்திற்கும் பொருந்தும் வகையில் தகுதிக்கான அளவுகோலை திருத்த வேண்டும்.
ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு நாட்டை பலி கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மறுபக்கம், ராமர் பால விவகாரத்தில் கலாச்சார தீவிரவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மை இந்தியர்களின் நம்பிக்கைகள், கடவுள்களை குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதற்கு ராமர் பால விவகாரம் சரியான உதாரணமாகும்.
இதன் மூலம் இந்துக்களின் இறை உணர்வுகளை மட்டும் பாதிக்கவில்லை மத்திய அரசு. மாறாக, ராமரும் இல்லை, ராமர் பாலமும் இல்லை என்றும் கூறி வருகிறது.இதுபோன்ற விளக்கங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நிராகரிக்கிறோம்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு கவசமாக ராமர் பாலம் விளங்குகிறது. மேலும், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் நலன்களுக்கும் இது உறுதுணையாக உள்ளது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை மறு பரிசீலனை செய்வோம்.
நாட்டில் பெருகி வரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பொடா போன்ற கடுமையான சட்டங்கள் தேவை. இதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிராக பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்க தீவிரவாதிகள் நினைக்கின்றனர். ஆனால் அதில் அவர்கள் தோல்வி அடைவது உறுதி.
அதிமுகவுடன் கூட்டணியா?
தமிழகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறி விட முடியாது. தேர்தலுக்கு முன்பே அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமா என்ற கேள்வியை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும்.தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலின்போது புதிய கட்சிகள் சேரும். கூட்டணி விரிவடையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பல நண்பர்கள் இதுதொடர்பாக பாஜகவைத் தொடர்பு கொண்டுள்ளனர். சிலர் தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இணைவர்கள். சிலர் தேர்தலுக்குப் பின்னர் இணைவார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் இது தெளிவாகத் தெரிய வரும்.நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் பாஜகவின் வாய்ப்புகளை, மாயாவதி தட்டிப் பறித்து விட்டார் என்று கூறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களை யாரும் ஓவர்டேக் செய்து விட முடியாது.
அதேபோல தலித் பெண் (மாயாவதி) ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவதை பாஜக அனுமதிக்காது என்று எந்த பாஜக தலைவரும் கூறவில்லை. அப்படி வெளியான செய்திகள் அடிப்படையவற்றவை என்றார் ராஜ்நாத் சிங்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
Thursday, July 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment