Friday, July 4, 2008

அழகு

காஞ்சிப் பெரியவர் கனிவே அழகு
கமலத் திருவடி மலரும் அழகு
தேன்சிந்த் தும்மலர் தெவிட்டா அழகு
தெளிவாய் ஓடும் ஆறும் அழகு.

பொக்கை வாயால் சிரிக்கும் மழலைப்
பூக்களின் இன்பம் கொள்ளை அழகு
நெக்குரு கிப்பல பாடல் இசைக்கும்
நல்லோர் இதயம் என்றும் அழகு.

திருவா ரூரின் தேரும் அழகு
திருவிடை மருதூர் வீதி அழகு
திருமகள் தங்கும் இல்லம் அழகு
திருந்திய உள்ளம் பெரும்பே ரழகு.

வேதியர் கூறும் வேதம் அழகு
வேதா படைத்த உலகம் அழகு
நீதியில் தவறா நிறைநிலை அழகு
நிலமக ளுக்கோ பயிரே அழகு.

காலை இளங்கதிர் கவிதைக் கழகு
கமலம் மலர்தல் கவின் பேரழகு
மாலை மதியம் மயக்கும் அழகு
மல்லிகை வாசம் முகர்ந்தால் அழகு.

ஈடிணை யில்லாத் தாயின் பாசம்
இறைவனின் கருணை காட்டிய அழகு
பாடம் படித்தல் பயில்வோர்க் கழகு
பாட்டில் இறையை உணர்தல் அழகு.

காஞ்சி காமாட்சி கருணை அழகு
கண்ணன் லீலை களிப்பது அழகு
தீஞ்சுவைத் திருவா சகமே அழகு
திருவாய் மொழியின் கருத்தும் அழகு.

எளியோர்க் கிரங்கும் இதயம் அழகு
எவரா னாலும் இன்முகம் அழகு
விளக்கின் ஜோதி வீட்டிற் கழகு
வினைவெல் லும்பன் னிருகை அழகு.

முருகன் என்ற சொல்லே அழகு
முத்தமிழ் இன்பம் முழுதும் அழகு
ஒருமை காட்டுமத் வைதம் அழகு
ஓங்கா ரப்பொருள் உண்மை அழகு.

கணபதி உருவம் காண்பதற் கழகு
கரவா தீயும் கொடையும் அழகு
கணமும் பிரியாக் கற்பே அழகு
கள்ளம் இல்லா உள்ளம் அழகு.

ப.இரா.கீதா
சென்னை.

No comments: