இன்று காங்கிரஸ் ஆட்சி காஷ்மீரத்தில் கவிழ்ந்துள்ளது. இதன் பின்னணி வருத்தம்
தரத்தக்கது. அமர்நாத் என்னும் இந்துக்களுக்கான புனிதத்தலம் முஸ்லிம்
பெரும்பான்மை காஷ்மீரில் உள்ளது. இந்த இடத்துக்குச் செல்வதற்கு இந்து
யாத்ரீகர்களுக்குப் பெரும் தொல்லை. எப்படி முஸ்லிம்கள் மெக்கா செல்கிறார்களோ
அதேபோல, இந்துக்களின் நம்பிக்கை காரணமாக பல தொல்லைகளையும் பொருட்படுத்தாமல் பல
ஆயிரம் இந்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் அமர்நாத் செல்கிறார்கள்.
அப்படிச் செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்துகொடுக்க சில ஏக்கர் நிலத்தை
ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் (SASB) என்னும் வாரியத்துக்கு காங்கிரஸ்
தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு தர முடிவுசெய்தது. உடனே இதற்கு எதிர்ப்பு
கிளம்பியது. ஒருபக்கம் இந்திய அரசுக்கு எதிரான பிரிவினைவாதிகள், வெளிப்படையாகவே
இந்து எதிர்ப்பைக் காட்டினார்கள். கொஞ்சம் மிதவாதிகள், சுற்றுச்சூழல் பாழ்படும்
என்று செகுலர் எதிர்ப்பைக் காட்டினார்கள். நேஷனல் கான்ஃபரன்ஸ் தெருத்தெருவாகச்
சென்று எதிர்ப்பிரசாரம் செய்தது. காங்கிரஸின் கூட்டாளிக் கட்சியான பி.டி.பி
அந்தர் பல்ட்டி அடித்து, "கூடாது, கூடாது, நிலத்தைக் கொடுக்கக்கூடாது" என்று
சொல்லி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.
ஆட்சி கவிழும் நிலையில், காங்கிரஸ் அரசு, ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த
நிலத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அரசின் சுற்றுலாத் துறையே
யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் என்று அறிவித்தது. இதை வரவேற்ற
பி.டி.பி, அரசுக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தது. இன்று
குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது.
பெரும்பான்மை இந்துக்கள் உள்ள தேசமான இந்தியாவில் முஸ்லிம்களின் வழிபாட்டு
இடங்களை முஸ்லிம்களே நிர்வகிக்கும்படி வக்ஃப் வாரியம் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் மெக்காவுக்குப் புனிதப்பயணம் செல்ல மத்திய அரசு மானியம்
வழங்குகிறது. ஆனால் காஷ்மீர் போன்ற மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக
இருக்கும்போது அவர்களது மத உரிமையை நிலைநாட்ட மிகச்சிறிய அளவுக்கு சில
வசதிகளைச் செய்துகொடுக்கும்போது இந்த அளவுக்கு எதிர்ப்பு காண்பிக்கப்படுவது
அசிங்கமாக உள்ளது.
"நமது நிலத்தை இந்தியர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறார்கள்" போன்ற வார்த்தைகள்
பிரிவினைவாதிகளிடமிருந்து வரும்போது அவற்றை எதிர்க்காத காஷ்மீர் அரசியல்
கட்சிகளையும் அறிவுஜீவிகளையும் கண்டிக்கிறேன்.
காஷ்மீரின் எதிர்காலம் பயம் கொடுப்பதாக உள்ளது. பாகிஸ்தான் ஒரு "தோல்வியுற்ற"
நாடு. தன்னை மேலே தூக்கிக்கொள்ளவே அந்த நாட்டுக்கு பல ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவுடன் இருப்பதில்தான் காஷ்மீரிகளுக்குப் பொருளாதார லாபம். கல்விமுதல்
வேலைவாய்ப்புகள்வரை அனைத்தும் இந்தியாவின் தயவால்தான் அவர்களுக்குக்
கிடைக்கிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச சுற்றுலாத் துறையையும் குண்டுவெடித்து
பயமுறுத்திவிட்டார்கள். இந்து பண்டிட்களை மாநிலத்தைவிட்டே துரத்தியாகிவிட்டது.
பலமுறை அமர்நாத் செல்லும் அப்பாவி யாத்ரீகர்களையும் லஷ்கார்-ஈ-தோய்பா, பிற
அமைப்புகள் பலமுறை தாக்கியுள்ளன. கடந்த ஓரிரு வருடங்களில் தாக்குதல்கள் ஏதும்
இல்லை. இப்போது நடந்துள்ள அசிங்கமான அரசியல் போராட்டத்துக்குப் பிறகு இதுபோன்ற
தாக்குதல்கள் அதிகரிக்கலாம்.
அப்படி நடந்தால் பெரும்பான்மை இந்தியர்களது "செண்டிமெண்ட்" திசை மாறும்.
அப்போது பாஜக ஆட்சியில் இருந்தால் (அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இது நிகழ
அதிக வாய்ப்பு உள்ளது) காஷ்மீரிகள்மீதான ராணுவ அடக்குமுறை அதிகரிக்கலாம். இந்த
நிலைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள், முக்கியமாக நேஷனல் கான்ஃபரன்ஸும்
பி.டி.பியும் துணைபோவது வருத்தம் தருகிறது.
மேலும் இந்தியாவின் பிற இடங்களில் இந்துத் தீவிரவாத அமைப்புகள்
முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் ஈடுபடுவதற்கும் இது வழிவகுக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய நேரம்
வந்துள்ளது. ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்துவிட்டு, காஷ்மீரையும்
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது என்று
நினைக்கிறேன்.
Posted by Badri at
17:57
Labels: இந்தியா
காஷ்மீர்
No comments:
Post a Comment