Thursday, July 3, 2008

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும் - கட்டுரை

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும் - ஏ.எம்.ஆர் கட்டுரை
from IdlyVadai - இட்லிவடை by IdlyVadai

பாரதம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்து மதத்தையும், இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பவித்திரமான ஆஸ்ரமங்கள், மடங்கள் ஆகியவற்றைப் பழிப்பதும், கேலி செய்வதும், நமது ஆச்சார்ய மகாபுருஷர்களின் ஒழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதும், நமது அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கும் பொழுது போக்காக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே! அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்துமத விரோத நடவடிக்கைகள், சில அரசியல் கட்சிகள் மற்றும் தற்போதைய தமிழக அரசு ஆகியவற்றின் ஆதரவுடனும், வெளிப்படையான பிரசாரங்களுடனும் நடைபெற்று வருவதும் உலகமறிந்த உண்மையாகும்.



தற்போது சினிமாத்துறையும் இத்தகைய அநீதியை இந்து சமூகத்திற்குச் செய்வதில் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தீவிரமாக இறங்கியுள்ளது. திரைப்படத்துறை என்பது ஓர் இருமுனை ஆயுதம். இதனால் சமூகத்திற்கு நன்மை செய்யவும் முடியும். தீமை செய்யவும் முடியும்.

வெளிநாடுகளில் விஞ்ஞானபூர்வமான,அதிசயக்கத்தக்க பல திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உலகப் புகழ்பெற்று வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ``டினோசார்'' என்ற மிருகத்தை வைத்து அற்புதமான படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து, மிகப் பெரிய அளவில் லாபமும், புகழும் பெற்றுள்ளனர் மேலைநாட்டுத் தயாரிப்பாளர்கள்.இதற்கு மாறாக,தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய திரைப்படங்கைளத் தயாரிப்பதற்குப் பதிலாக தரக்குறைவான படங்களையே பெரும்பாலும் தயாரித்து வருகின்றனர். சென்றகாலத் திரைப்படங்களில் உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நல்ல கதைகள் இருக்கும். பண்புள்ள கருத்துகள் பொதிந்திருக்கும். நல்ல சங்கீதமும் இருக்கும். நடிப்பிலும் திறமை இருக்கும்.

உதாரணமாக,திரைப்பட உலகில் தனக்கென்று அழியாத ஒரு தனிச்சிறப்பையும், பெருமையையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டவர் திரு. சிவாஜிகணேசன் அவர்கள். இவரைப்போன்றே சென்றகாலத்தில் புகழ்பெற்ற நடிகர்களான திரு. பி.யூ. சின்னப்பா, திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரையும் கூறலாம். பாடல்களை எழுதியவர்களும் உண்மையான கவிஞர்கள். அவர்கள் எழுதிய பாடல்களில் நயம் இருக்கும். நெஞ்சைத் தொடும் நல்ல கருத்துகள் இருக்கும். பாடல்களில் விரசமும், இரட்டை அர்த்தமும் இருக்காது. கண்ணியம் இருக்கும். இவற்றிற்கு உதாரணமாக திரு. கண்ணதாசன்அவர்களைச் சொல்லலாம்.

ஆனால் தற்காலத் திரைப்படங்களில் நல்ல கதைகள் கிடையாது. கருத்துகள் கிடையாது. பாலுணர்வைத் தூண்டும் இரட்டை அர்த்தம் பொதிந்த தரக்குறைவான பாடல்களே பெரும்பாலும் ஒலிக்கின்றன! பொழுதுபோக்கிற்கு வேறு வழியின்றித் ``தலைவிதியே'' என்று சகித்துக்கொண்டு இதுபோன்ற தரக்குறைவான திரைப்படங்களை மக்களும் பார்த்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகளும், திறமையை விட சிறிதளவும் வெட்கமின்றி, உடலழகைக் காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

தற்போதைய திருப்பம்!

இந்நிலையில் சமீபகாலமாக, திரைப்படத்துறையினரின் பார்வை இந்து சமுதாயத்தின் மீதும், இந்து மதத்தின் மீதும் திரும்பியுள்ளது. இந்துக்கள் என்றாலே அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அரசாங்கத்தின் பாதுகாப்பும் நமக்கு உள்ளது என்ற எண்ணத்தில், ஏராளமான மகான்களாலும் மகரிஷிகளாலும் அளவற்ற ஆன்மிகச் சக்தி பெற்ற இம்மாபெரும் இந்து சமுதாயத்தை மிகவும் கேவலமாகச் சித்திரிப்பதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டு முனைந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இத்தகைய திரைப்படங்களைப் பற்றி எந்தத் தமிழகப் பத்திரிகையும் நடுநிலைமையாக விமர்சிப்பதில்லை. பிரசாரம், விளம்பரம், அரசியல் ஆதரவு, சம்பந்தப்பட்ட நடிக, நடிகையர் ஆகியோரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே மிகத் தரக்குறைவான படங்களைக்கூட `ஓஹோ' என்று தமிழகப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதிவருவது கண்கூடு. இதற்குக் காரணம், சினிமாத்துறை குவித்துவரும் பணம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நிலைமையே மாறிவிட்டது. லஞ்சமாகவோ அல்லது பரிசாகவோ அல்லது பட்டமாகவோ கொடுத்துவிட்டால் மனசாட்சியை எளிதில் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை தேசபக்தி உள்ள எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய சூழ்நிலையில்தான், சென்ற சில நாட்களுக்கு முன்பு, மிகப் பெரிய அளவில் விளம்பரமும், பிரசாரமும் செய்யப்பட்டு, சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது `தசாவதாரம்' என்ற புதிய தமிழ்ப்படம். என்னிடம் அன்பு கொண்ட ஏராளமான `குமுதம் ஜோதிடம்' வாசக அன்பர்கள் இப்படத்தைப் பற்றி மிகவும் மனம் வருந்தி எழுதியுள்ளனர். தொலைபேசியிலும் கூறி வருத்தப்பட்டனர். இதுபற்றி விவரங்கள் கூற எங்கள் மனமும், மனசாட்சியும் இடம் தரவில்லை.

எத்தனையோ உயர்ந்த கருத்துகளும், மக்களின் கலாசாரம், பண்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உயர்த்தக்கூடிய மிகவும் தரமுள்ள திரைப்படங்களை எடுத்து பெருமைப்படுவதை விட்டுவிட்டு, இத்தகைய தரக்குறைவான படங்களைக் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ஏன் எடுக்கவேண்டும் என்று மிகவும் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார்கள் பல அன்பர்கள். இவர்களில் பலர் படித்து நல்ல பதவிகளில் உள்ள தேசபக்தி நிறைந்த பெரியோர்கள், சான்றோர்களும்கூட.

இது நமக்குப் புதிதல்ல..!

காலம் காலமாக, உலகில் வேறு எந்த மதமும் தோன்றாமல் இருந்த காலத்திலிருந்தே பெயரும், புகழும், பக்தியும் நிறைந்த இந்து சமுதாயத்திற்கு இத்தகைய அநீதிகள் புதிதல்ல. உலகில் வேறு எந்தச் சமூகத்தினருக்கும் இத்தகைய கொடிய அநீதிகள் இழைக்கப்படவில்லை என்பதை இந்திய சரித்திரம் எடுத்துரைக்கிறது. ஏராளமான அன்னியர்களின் படையெடுப்பின்போது, கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் கணக்கில் அடங்கா! அவ்வளவு ஏன்? இந்தியாவிலிருந்துபாகிஸ்தான் பிளவுபட்டபோது, பாகிஸ்தானின் நகரத் தெருக்களில் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமைகளை மேலைநாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனை அப்போதைய இந்திய அரசாங்கமும், ஆங்கிலேய அதிகாரிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். அந்தக் கொடுமைகளை மறப்பதற்கு இந்துச் சமுதாயம் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்நிலையில், இந்துத் தாய்க்குப் பிறந்து, இந்துத் தாயின் பாலைப் பருகி இந்துக்களாக வளர்ந்தவர்களே இன்று இத்தகைய படத்தைத் தயாரித்து அன்பிலும், கருணையிலும் உயர்ந்த இந்து சமுதாயத்தை ஈனப்படுத்திப் பேசுவதும், எழுதுவதும், கேவலப்படுத்துவதும் எவ்விதம் நியாயமாகும்?

பாரத மக்களுக்கு இத்தகைய கொடுமைகள் புதிதல்ல. துவாபர யுகத்தில் பவுண்டரகன் என்றொரு மன்னன் இருந்தான். `இறைவன் என்று ஒருவன் கிடையாது. அந்த இறைவன் நான்தான். நான்தான் அந்த வாசுதேவன்' என்று ஆணை பிறப்பித்தான் அவன். (பகவான் ஸ்ரீமந் நாராயணனுக்கு வாசுதேவன் என்ற பெயர் உண்டு). அவனுக்கு பயந்து மக்கள் அவனை வணங்கினர். இருப்பினும் ஒருசிலர் மறைமுகமாக, `பகவான் என்றால் நான்கு கரங்கள் இருக்கவேண்டுமே! சங்கு, சக்கரம் இருக்கவேண்டுமே! கருட வாகனம்தான் எங்கே உள்ளது?' என்று பேச ஆரம்பித்தார்கள். இது மன்னனின் காதில் விழுந்தது. ஆதலால் அவன் அக்காலத்தில் இருந்த ஒரு நிபுணரைக் கொண்டு யந்திரங்கள் வைத்த இரண்டு கைகள், சங்கு சக்கரம், ஒரு கருட வாகனம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டான். அதன்மூலம் தான்தான் அந்த வாசுதேவன் என்று கூறிக்கொண்டான்.

துவாரகையை கண்ணன் ஆண்டுவந்த காலம் அது!மன்னன் பவுண்டரகனின் அட்டூழியம் அதிகரித்தது. மக்களால் அக்கொடுமைகளைத் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, கண்ணனே பவுண்டரகனைப் போருக்கு அழைத்து, அவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினான்.

பவுண்டரகனோடு ஒப்பிடும்போது, தமிழகத்தின் தற்போதைய நாத்திக அரசியல் தலைவர்கள் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். `தெய்வம் உண்டு; அது நான்தான்!' என்று கூறினான் பவுண்டரகன். ஆனால், இந்த நாத்திகர்களோ, பகவானே இல்லை என்றல்லவா கூறுகிறார்கள்!

சென்ற சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாத்திக பிராசார படத்தில், மகா உத்தமியும், கற்புக்கரசியுமான ஸ்ரீசீதையைப் பற்றி அவதூறாக ஒரு பாடலை எழுதி, பல தலைமுறைகளுக்கான கொடிய பாவத்தை இப்போதே சேர்த்துக்கொண்டுவிட்டார் ஒரு ``கவிஞர்.'' பாவம்-புண்ணியம் ஆகியவற்றில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். ஆனால் தர்மம் என்றொரு சட்டம் இருக்கிறது அல்லவா! அது தன் கடமையைத் தவறாமல் செய்யும். காலம் இதனை நிரூபிக்கும்.

பணத்திற்குப் பத்தும் விலை போகும்!

இந்து சமுதாயத்தையே கேவலப்படுத்தி எடுக்கும் இத்தகைய திரைப்படங்களினால் பணம் சேர்க்கலாம். ஆனால், அந்தப் பணத்திற்காக இவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ``பணம் பத்தும் செய்யும்'' என்றொரு மூதுரை உண்டு. ஆனால், இதே பணம், இவர்களது குலம், கல்வி, மானம், தவம், கற்பு, பெருமை, ஒழுக்கம், அறிவுடைமை, தாளாண்மை, தூய்மை ஆகிய பத்து பெருமைகளை இழக்கவும் செய்யும் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். ஆணவமும், பணத்தாசையும் இவர்கள் கண்களை மறைக்கின்றன. சாதுக்களாக வாழ்க்கை நடத்திவரும் இந்துக்களுக்கு இத்தகைய திரைப்படங்களின் மூலம் இவர்கள் இழைத்து வரும் அநீதிகளின் மூலம், பாவம் எனும் கொடிய நாகப்பாம்பைத் தேடி, அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இவர்களைத் தீண்டும்போது, இவர்கள் தேடி ஓடிச் சேர்த்த பணம், கைகுலுக்கிய அரசியல் செல்வாக்கு என்று எதுவும் இவர்களுக்குத் துணை நிற்காது.

இன்று இவர்கள் சிரிக்கட்டும்! அந்த நாள் வரும்போது தர்மதேவதை சிரிக்கும்!!

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும்!!!
( குமுதம் ; ஜோதிடம் )

மூலம்: http://idlyvadai.blogspot.com/2008/06/blog-post_265.html

No comments: