Saturday, August 2, 2008

ஆடிப்பெருக்கு: தமிழக இந்துக்கள் உற்சாக கொண்டாட்டம்

நன்றி: எழில் - http://ezhila.blogspot.com/2008/08/blog-post_7181.html

ஆடிப் பெருக்கு: உற்சாக கொண்டாட்டம்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 2, 2008

திருச்சி: ஆடிப் பெருக்கு பண்டிகை தமிழகத்தின் ஆற்றங்கரையோர நகரங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடிப் பெருக்கு பண்டிகை தமிழகத்தின் ஆற்றங்கரை பகுதிகளில் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

குறிப்பாக காவிரி ஆற்றுப் படுகைப் பகுதிகளில் அதீத உற்சாகத்துடன் ஆடிப் பெருக்கு கொண்டாடப்படும். இந்த சமயத்தில், காவிரி ஆறு பொங்கிப் பெருகி வருவது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் இல்லாமல், மனம் நிறைய வருத்தத்துடன் மக்கள் ஆடிப் பெருக்கைக் கொண்டாடிய காலமும் உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் ஆடிப் பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு தினமும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காரணம், காவிரியில் தண்ணீர் பொங்கி பெருகி வருவதுதான்.

ஆறுகள் என்றில்லாமல் குளங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றிலும் மக்கள் ஆடிப் பெருக்கைக் கொண்டாடினார்கள்.

திருச்சி நகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காவிரி ஆற்றங்கரைகளில் திரண்டு சாமி கும்பிட்டு மகிழ்ந்தனர்.

அம்மா மண்டபம் பகுதியில் இன்று மக்கள் கூட்டம் அலை மோதியது.

புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்து படையலிட்டு சாமி கும்பிட்டனர்.

அதேபோல மணமாகாத பெண்களும், நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பனை ஓலையில் செய்யப்பட்ட தோடுகளை வைத்தும், கருகமணி, காப்பரிசி வைத்தும் வணங்கினர்.

பக்தர்கள் கூட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆபத்தான இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.

திருச்சி தவிர கரூர், ஈரோடு, பவானி உள்ளிட்ட காவிரிப் பகுதிகளிலும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது.

பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் திரண்டு ஆடிப் பெருக்கை கொண்டாடினர்.

No comments: