Wednesday, August 13, 2008

அமர்நாத் விவகாரம்: முன்னெச்சரிக்கை இன்றி போலீஸ் துப்பாக்கிச் சூடு; 5 பேர் மரணம், 8 பேர் படுகாயம்

ஸ்ரீநகர், ஆக.12: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் இன்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலம் திரும்ப பெறப்பட்டது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு பகுதியில் நடைபெற்று வந்த இந்த போராட்டம் தற்போது காஷ்மீர் பகுதியிலும் பரவியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள பாண்டிபோரா மாவட்டத்தில் உள்ள வாட்லாக் பகுதியில் சிலர் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு காயம் பட்டு உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்ததாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு படையினர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் உள்ள லஸ்ஜான் பகுதியிலும் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டது ஜம்மு-காஷ்மீரில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி: மாலைசுடர்

No comments: