Wednesday, August 6, 2008

அமர்நாத் கோவில் வாரிய உறுப்பினர்கள் கூண்டோடு விலகல்

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
புதன்கிழமை, ஆகஸ்ட் 6, 2008

ஸ்ரீநகர்: அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் (அமர்நாத் கோவில் வாரியம்) 10 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதங்களை கவர்னர் வோராவுக்கு அனுப்பியுள்ளனர்.

அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி மற்றும் ஓய்வறைகள் கட்டுவதற்காக காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றது.

இதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இரு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.

இந்நிலையில் சமிதியில் உள்ள 10 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னர் வோராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமிதிக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளும்படி அதில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சமிதியின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் கூறிகையில், நில விவகாரத்தில் அவர்களாகவே (அரசு) முடிவு செய்து கொள்கின்றனர். எந்த முடிவையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இது மக்களே ஏற்று நடத்தும் போராட்டம். ஜம்மு மக்களை வைத்து பேசாமல் எந்த முடிவை எடுத்தாலும் அது ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த முறை நிலத்தை பார்வையிட்ட பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் மாநில அரசுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 38 நாட்களாக தொடர்ந்து இங்கு கலவரம் நடந்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்க மத்திய அரசுக்கு இப்போதுதான் தோன்றியிருக்கிறது என்றார்.

No comments: