Wednesday, August 13, 2008

அமர்நாத் நிலத்துக்காக பா.ஜ.க., வி.ஹி.ப. சாலை மறியல்

வேலூர், ஆக. 13: அமர்நாத் நிலத்தை வழங்கக் கோரி இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 261 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமர்நாத் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் , அதை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் வேலூரில் இன்று இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் மாவட்ட தலைவர் ஏழை முனுசாமி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் வி.கே.தாமோதரன், பிஜேபி மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.வி.பிரகாஷ், அமைப்பு செயலாளர் தசரதன் உள்ளிட்ட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தில் நடைபெற்ற சாலை மறியலில் மாவட்ட பிஜேபி தலைவர் தணிகாசலம் உட்பட 102 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்பூரில் பிஜேபி மாநில கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 37 பேர் கைது செய்யப் பட்டனர்.திருப்பத்தூரில் பிஜேபி முன்னாள் மாவட்ட தலைவர் சிவசண்முகம் தலைமையில் 34 பேர் சாலை மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடியில் பிஜேபி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 17 பேர் சாலை மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர்.

நன்றி: மாலைசுடர்

No comments: