Tuesday, August 26, 2008

மணலி - விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 5 ஆயிரம் சிலைகள்

திருவொற்றிïர், ஆக.26-

விநாயகர் சதுர்த்திக்காக, மணலியில் இந்து முன்னணி சார்பில் தயாராகும் 5 ஆயிரம் சிலைகளை, ராம. கோபாலன் பார்வையிட்டார்.

விநாயகர் சதுர்த்தி

சென்னையை அடுத்த மணலியில், சென்னை மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகளின் பாகங்கள், காகித கூழ், கிழங்கு மாவினால் செய்யப்பட்டு, பண்ருட்டியில் இருந்து இங்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவற்றை மணலியில் ஒன்று சேர்த்து, வர்ணம் கொடுக்கப்படுகிறது.

இங்கு, காளிங்க விநாயகர், பசு சூர விநாயகர், கருட விநாயகர், சிங்க முக விநாயகர் போன்ற பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் செய்யப்படுகின்றன. இவை, செப்டம்பர் 1-ந் தேதி சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படும்.

பார்வையிட்டார்

சிலைகள் உருவாக்கப்படுவதை நேற்று, இந்து முன்னணி மாநில தலைவர் ராம.கோபாலன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து முன்னணி சார்பில் 25-வது விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து இருக்கிறோம். இதையொட்டி அன்னதானம், ரத்த தான முகாம்கள், ஏழைகளுக்கு ஆடை வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு-புத்தகங்கள் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை செய்ய இருக்கிறோம்.

விநாயகர் ஊர்வலத்தில் யாரும் வண்ண பொடிகளை தூவக்கூடாது என்று கண்டிப்பாக கூறி இருக்கிறோம். பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். சென்னையில் விநாயகர் சிலைகளை, பட்டினப்பாக்கம், சீனிவாச புரம், நீலாங்கரை கடற்கரையில் கரைக்கலாம்.

தடையை மீறுவோம்

திருவல்லிக்கேணி பகுதியில், விநாயகர் ஊர்வலம் செல்ல தடை விதித்து உள்ளனர். எங்கள் தொண்டர்கள் கட்டுப்பாடுடன் செல்வார்கள். நாங்கள் வழக்கம் போல தடையை மீறி ஊர்வலம் செல்வோம், கைதாவோம். எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது.

இவ்வாறு ராம. கோபாலன் கூறினார். அவருடன் சென்னை மாநகர் செயலாளர் முருகேசன், மாவட்ட பொது செயலாளர் மனோகரன், வட சென்னை மாவட்ட தலைவர் செல்வ குமார், திருவொற்றிïர் தலைவர் சீனிவாசன், மணலி தலைவர் ஆனந்தன், மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க தலைவர் டி.ஏ. சண்முகம் ஆகியோர் இருந்தனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=434469&disdate=8/26/2008

No comments: