சிதம்பரம் நடராசர் கோவில் குறித்தும், நகரில் உள்ள பல மடங்கள் குறித்தும் அவ்வப்போது சாசனங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. சமீபத்தில் விஜயநகர அரசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வண்ணார் மடம் குறித்த இரு செப்பேடுகளைத் தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். முதல் செப்பேடு மூன்று ஏடுகளைக் கொண்டு முழுமையாக உள்ளது.
இரண்டாம் செப்பேடு ஒரே ஏட்டுடன் முழுமையின்றி உள்ளது. எனினும், இரண்டும் ஒரே காலமாகும். இரண்டு செப்பேடுகளிலும் தொடக்கத்தில் சிவலிங்கமும் நந்தியும் சூலமும் சூரிய சந்திர உருவங்களும் வீரமணவாளர் தேவியருடன் கூடிய சிற்பங்களும் துணிவெளுக்கும் கல்லும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் மடம் புதுப்பிக்கப்பட்ட விவரங்களும் உள்ளன.
வண்ணார் ஜாதி தோற்றத்திற்கான புராண வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. தட்சணையும் அவனுக்கு உதவியாக வேள்வி செய்த தேவர் மற்றும் தேவிகளை அழிக்க, வீரபத்திரரைச் சிவபெருமானும், காளியை உமையம்மையும் தோற்றுவித்தனர். அவர்கள் அவ்வாறே அழித்தனர். தேவர்களை வீரபத்திரரும், தேவிகளைக் காளியும் அழிக்கின்றனர்.
பின்னர் இறந்த தேவர், தேவிகளுக்கு மீண்டும சிவன் உயிர்கொடுத்தபோது அவர்கள் மீதிருந்த உதிரம்போக, வருணனை மழை பெய்யும்படி சிவன் ஆணையிட்டார். வருணன் மழைபெய்தும் குருதிக்கறை ஆடைகளில் இருந்து போகாததால், வீரபத்திரர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டு வீரன் எனப் பெயரும் சூட்டி ஆடைகளை வெளுக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த வண்ணார் மரபில் திருக்குறிப்புத் தொண்டர் பிறந்தார். இவருடைய மரபில் வீரமணவாளர் பிறந்து அவர்தம் பெண்ணை அண்ணாமலையாருக்குத் தந்தார். பிறகு வண்ணாரின் சிறப்புகள் விரிவாகச் செப்பேட்டில் கூறப்படுகின்றன.
சக ஆண்டு 1445ம் ஆனந்த ஆண்டும் பொருந்திய (கி.பி., 1593) காலத்தில் சிதம்பரம் கோவிலை வழிபட கிருஷ்ணதேவராயர் வருகிறார். அவருடன் அவருடைய துணிகளை வெளுக்கும் குருவப்ப வண்ணானும் சிதம்பரம் வருகிறார். சிதம்பரத்தில் பூர்வீகமாக இருந்து வரும் வண்ணார் மடம் அழிந்த நிலையில் இருப்பதைக் கேட்டு அவரும் தகுந்த ஆணை பிறப்பித்தார். இதற்காக கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் பங்கேற்றனர். அதன்படி, கீழைக்கோபுர வாசலில், வடதுண்டில் இண்டந்தெரு வீதியின் கீழ் சிறகில் சேக்கிழையான் என்பவரிடம் மனை வாங்கி மணவாளப் பிள்ளையார் கோவிலும் மடமும் கட்டப்பட்ட விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
கிருஷ்ண தேவராயருக்குப் பின், அச்சுதராயர் ஆட்சிக்கு வந்தபோதும் மடத்திற்கான கட்டளை ஒழுங்காக, வராததால் முறையீடு செய்து முடிவு எடுக்கப்பட்ட தகவலும் உள்ளன. அச்சுதராயர் கல்வெட்டுகள் நடராசர் கோவிலில் உள்ளன.வண்ணார் மரபில் வந்த பலர் கூடி மகமை வழங்க உடன்பட்டுச் செப்பேடும் வெட்டுகின்றனர். ஒவ்வொரு வண்ணார்க்குடியும் குடிக்கொரு பணமும் மணப்பெண்ணும் மணமகனும் திருமணத்தின் போது, தலா ஒரு பணமும் தருவது என்றும் முடிவு செய்யும் தகவல் உண்டு. தற்போது மடம் சிதைந்தபடி உள்ளது. இத்தனை தகவல் கூறும் இருசெப்பேடுகளும் பரங்கிப்பேட்டை ஆசிரியர் கு.செல்வராசன் பாதுகாப்பில் உள்ளன. மேலும் இவைகள் குறித்து கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து வருகிறார். - Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment