Friday, August 8, 2008

பரவுகிறது பயங்கரவாதம்: தாக்குப்பிடிக்குமா தமிழகஉளவுத்துறை?

இந்தியாவில், பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம், ஓங்கி ஒலிக்கும் குற்றச்சாட்டு "இன்டலிஜென்ஸ் பெயிலியர்" (உளவுத்துறை தோற்று விட்டது) என்பது தான். அவ்வாறான, குற்றச்சாட்டுக்கு தமிழக உளவுத் துறை ஆளாகாமல் தடுக்க, உளவுப் பணிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது அவசியம் என்ற கருத்து போலீஸ் வட்டாரத்தில் வலுவடைந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, சமூக, பொருளாதார ரீதியாக நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். அதற்கான, நடவடிக்கையை அமல்படுத்துவதில், உளவுத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது.

மத்திய உளவுத் துறை (ஐ.பி.,), "மிலிட்டரி இன்டலிஜென்ஸ் (எம்.ஐ.,) உள்ளிட்ட மத்திய மற்றும் ராணுவ உளவுத் துறையின் சேவை, காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பயங்கரவாதி களை வேட்டையாட உதவுகிறது. அதே போன்று, அந்தந்த மாநில போலீஸ் நிர்வாகத்தின் கீழும், பல்வேறு பெயரிலான உளவு அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், தற்போது ஐ.ஜி., தலைமையில் செயல்படும் உளவுத் துறையின் கீழ் எஸ்.பி.சி.ஐ.டி., (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை), எஸ்.டி., (ஸ்பெஷல் டிவிஷன்), எஸ்.பி.சி.ஐ.டி., (செக்யூரிட்டி), கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., ஆகியவை செயல்படுகின்றன. இவை டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.மாநகரம், மாவட்டம் வாரியாக சேகரிக்கப்படும் உளவுத் தகவல்கள், உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக மேற் கொள்ளப்படுகிறது.

சென்னையை தகர்க்க சிறையில் திட்டம் தீட்டிய அப்துல்கபூரை, போலீசார் சமீபத்தில் கைது செய்தது; இலங்கைக்கு ஆயுதம் கடத்திய புலிகள் பலர் கைது செய்யப்பட்டது; 1998, பிப்.14ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின் அண்டை மாநிலங்களுக்கு தப்பிய முக்கிய பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து கைது செய்தது; கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இமாம் அலி உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளின் மறைவிடத்தை மோப்பம் பிடித்து, தமிழக போலீசார் சுட்டுக் கொன்றது போன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உளவுத் துறையின் பங்களிப்பு மகத்தானது. அதே வேளையில், குண்டுவெடிப்பு, வி.ஐ.பி., மீதான தாக்குதல் போன்ற அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் "இன்டலிஜென்ஸ் பெயிலியர்' என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.சமீபத்தில், பெங்களூரு மற்றும் ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இம்மாதிரியான குற்றச்சாட்டு மத்திய, மாநில உளவுத்துறைகள் மீது சுமத்தப்பட்டன.

இதை தொடர்ந்து, தமிழக உளவு அமைப்புகளின் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், உளவு அமைப்புகளின் நடவடிக்கையை வலுவாக்கக் கூடிய வகையில் வாகனம், எரிபொருள், நவீன தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழு அளவில் நிறைவேற்றப்படவில்லை; போலீஸ் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், உளவு பார்ப்பு, தகவல் சேகரிப்பு பணியை திறம் பட மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
தடுமாறும் போலீஸ்: வெடிபொருட்களை கையாள்வோர் மீது சட்டப்படியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்துதல்; நக்சல்கள் மற்றும் புலிகளை கண்காணித்தல் ஆகியவை "கியூ., பிராஞ்ச் சி.ஐ.டி.,' பணி. அதே போன்று, மத அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் பயங் கரவாதிகளை கண்காணிப்பது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள எஸ்.ஐ.யூ.,வின் பணி. அன்றாட அரசியல் நிகழ்வுகள், ஜாதி - மத அமைப்புகள், பயங்கரவாதிகளை பற்றிய தகவலை திரட் டுவது, மாநகரம் மற்றும் மாவட்டம் தோறும் உள்ள எஸ்.பி.சி.ஐ.டி., யின் பணி. இம்மூன்று அமைப்புகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. வாகனம் இல்லை: டி.எஸ்.பி., கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு காரும், எஸ்.ஐ.,கள் சிலருக்கு பைக்களும் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் காருக்கு மாதம் 130 லிட்டர் எரிபொருளும், பைக்குக்கு 20 லிட்டர் பெட்ரோலும் அரசு வழங்குகிறது. பல எஸ்.ஐ.,கள் தலைமைக்காவலர்கள், காவலர்களுக்கு வாகனம் கிடையாது; பஸ்சிலும், சொந்த பைக்கிலும் சென்று உளவுத்தகவல் திரட்டுகின்றனர்.
சொந்த பைக் பயன்படுத்து வோருக்கு பெட்ரோல் கூட அரசு சார்பில் வழங்கப்படுவதில்லை; "பாக்கெட் மணி'யையே பயன் படுத்துகின்றனர். இதனால், "இன் பார்மரை' அவ்வப்போது சந்தித்து, உளவுத் தகவல்களை திரட்ட முடியாமல் திணறுகின்றனர். போன் வசதியில்லை: எஸ்.பி.சி.ஐ.டி.,யில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டுமே துறை சார்பில், "சி.யு.ஜி.,' முறையில் மொபைல்போன் வழங்கப்பட் டுள் ளது. தங்களது "சி.யு.ஜி.,' வளையத்தில் இருக்கும் சக போலீசாருடன் மட்டுமே இவர்கள் தகவல் களை பரிமாறிக்கொள்ள முடியும். மற்ற மொபைல் போன் எண்களை தொடர்பு கொண்டால், கூடுதல் கட்டண தொகையை போலீசாரே செலுத்த வேண்டும். இதனால், உளவுத்தகவல் தரும் "இன்பார்மர்'களை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில் போலீசார் உள்ளனர்.

எஸ்.பி.சி.ஐ.டி., போலீசாருக் காவது துறை சார்பில் மொபைல் போன் வழங்கப்பட்டிருக்கிறது; பயங்கரவாதிகளை கண்காணிக்கும் எஸ்.ஐ.யூ., போலீசாருக்கு அதுவும் இல்லை. நிதியும் இல்லை: உளவுத் தகவல் சேகரிக்க "நிதி ஒதுக்கீடு' அவசியம். ரகசியமான தகவல் தரும் "இன்பார்மர்கள்', பிரதிபலனாக போலீசாரிடம் "தொகை' எதிர் பார்க்கின்றனர். அவ்வப்போது, அவர்களுக்கு செலவழித்தால் தான், உருப்படியான தகவலை போலீசாரால் திரட்ட முடியும்; உண்மையான தகவல்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கும் தர முடியும். ஆனால், "இன்பார்மர்'களுக்கு செலவிட போதுமான நிதி, போலீசுக்கு வழங்கப்படுவதில்லை. "ரிவார்டு' என்ற பெயரில் போலீசாருக்கு அவ்வப்போது தரப்படும் ஐம்பது, நூறைக் கொண்டு, "இன்பார்மருக்கு' ஒரு வேளை உணவு கூட வாங்கித்தர முடியாது.
"நிலைமை இப்படியிருக்க; எப்படி நாங்கள் உளவு தகவல் சேகரிப் பது?' என்ற கேள்வியை எழுப்புகின்றனர் உளவு போலீசார். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் போலீசார், மேலும் பல்வேறு சவால்களையும் எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அறிக்கையும், அதிருப்தியும்: தாங்கள் அளிக்கும் ரகசிய அறிக்கையின் பேரில், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என, அதிகாரிகள் சிலர் குறைபட்டுக்கொள்கின்றனர்.

"1998, பிப்.14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பே, "அல்-உம்மா' சதித்திட்டம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை தரப் பட்டது. எனினும், உளவு போலீசில் பணியாற்றிய ஒரு சிலரின் அஜாக்கிரதையால் குண்டுவெடிப்பை தடுக்க முடியாமல் போனது' என, கோவை போலீசார் இன்று வரை புலம்புகின்றனர். அதே போன்று, தற்போது தலைமறைவாக இருக்கும் வெடிகுண்டு பயங்கரவாதி தவ்பீக் பற்றி முன்னரே பல முறை மேலிடத் துக்கு ஆதாரப்பூர்வமான அறிக்கை அனுப்பப்பட்டது; அவனது பதுங்குமிடம் குறித்து திருச்சி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. எனினும், போலீசார் அப்போது கைது செய்யாமல் தப்பிக்க விட்டுவிட்டு, தற்போது தவிக்கின்றனர்.

அடுத்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினர், கேரளாவில் அதிநவீன துப்பாக்கி பயிற்சி பெற்றுள்ளதாக, உளவு போலீசார் அனுப்பிய ரகசிய அறிக்கையை மேற்கோள்காட்டி, கடந்த 2007ல் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார், அப்போதைய பொதுத் துறை செயலர் ஆதிசேஷையா.

ஆனால், இன்று எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக, அந்த அமைப்பினருக்கு, ஆதரவான போக்கே நிலவுகிறது. இப்படி, மேலிடத்துக்கு அனுப்பப் படும் பல்வேறு தகவல்கள் பயனின்றி போவதால், உளவு போலீசார் மத்தியில் ஒரு விரக்தி நிலவுகிறது. பயிற்சி போதாது: புலன்விசாரணை ஏஜென்சிகளே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அல்லது திணறும் அளவுக்கு, பயங்கரவாதிகள் அதிநவீன தொழில்நுட்ப முறைகளை கையாள்கின்றனர். ஆனால், அவர்களை கண்காணிக்கும் உளவு போலீசார் போதிய பயிற்சியின்றி இருப்பது, பெரும் குறையாக உள்ளது.

உளவுப்பிரிவு காவலர்கள் மட்டத்திலும் அவ்வப்போது பணியிடை பயிற்சி அளித்து, பயங்கரவாத அமைப்புகளின் சதித்திட்டம், "நெட்வொர்க்', அவர்கள் சதியை ஒருங்கிணைத்து முறியடிக்கும் முறையை கற்றுத்தருவது அவசியம்; காவலர்களை தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். தற்போது, இப்பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும், அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகின்றன.நடைமுறை சிக்கல்: "ஒரு இடத்தில் அசம்பாவிதம் நிகழப்போகிறது; பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளது' என, உளவுப்பிரிவினர், போலீசாரை முன்கூட்டியே உஷார் படுத் தினாலும், நாசவேலை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன.கடந்த 2001ல் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களும், ராணுவ தலைமையகம் பென்டகனும் ஆப்கன் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பின், இதுவரை, அங்கு வேறு எந்தவொரு பயங்கரவாத நிகழ்வும் நடக்கவில்லை.
காரணம், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு நடவடிக்கைகள் உறுதி வாய்ந்தவை. ஒரு நகரில் வசிப்போர், அடுத்த நகரத்துக்குச் சென்றாலும் அடையாள அட்டை பரிசோதிக்கப் படுகிறது; அன்னிய நபர்களின் பிரவேசம் முற்றிலுமாக தடுக்கப் படுகிறது. ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அதுபோன்ற அடிப்படை பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எவ்வித அடையாள ஆவணமும் இன்றி, யாரும் எங்கு வேண்டுமாலும் செல்லலாம், பஸ், ரயில்களில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இதனால், சாதாரண குடிமக்களையும், பயங்கரவாதிகளையும் இனம் கண்டறிவதிலும், கைது செய்வதிலும், நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.சிறையில் பிரச்னை: தமிழக சிறைத்துறை மற்றும் உளவுத்துறை இடையே மேல்மட்ட அளவில் போதிய தகவல் பரிமாற்றம் இருப்பினும், கீழ் மட்ட அளவில் அவ்வாறு இல்லை. இதனால், சிறை நிர்வாகம்- உளவு போலீஸ் இடையே அவ்வப்போது பிரச்னை, மோதல் ஏற்படுகிறது. முக்கிய சிறைகளின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் போலீசாரை, சிறை அதிகாரிகளில் பலர் எதிரியை போன்றே அணுகுகின்றனர். சிறை நிர்வாகம் மீது வீண் பழிபோட்டு பிரச்னை ஏற்படுத்துவதாகவும் கருதுகின்றனர். இதனால், "உளவு போலீசாருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது' என, சிறை ஊழியர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.
இதன் விளைவாக, சிறையினுள் நடக்கும் விவரங்களை திரட்ட முடியாமல் தவிக்கும் போலீசார், சில நேரங்களில் உறுதிபடுத்தப்படாத தகவலையும் ஊதி பெரிதாக்கி மேலிடத்துக்கு தெரிவிக்கின்றனர். கோவை மத்திய சிறையில் இதுபோன்ற பிரச்னைகள் அவ்வப் போது எழுகின்றன. முன்பு, இங்கு கண்காணிப்பாளராக பணியாற்றிய ராஜ்குமார், சிறை வளாகத்துக்குள் நுழைய உளவு போலீசாருக்கு தடை விதித்தார்; உயரதிகாரிகள் தலையிட்டு கண்டித்த பின் தடையை விலக்கினார். தற்போதும் கூட, இதே போன்ற "எதிரி அணுகுமுறை' பல்வேறு சிறைகளில் கடைபிடிக்கப்படுகிறது. எனவே சிறை நிர்வாகம்- உளவுத்துறையின் கீழ் மட்ட அளவில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.

1 comment:

Anonymous said...

அட எனாண்ணே... நீங்க போயி என்னா என்னாவோ எழுதிக்கிட்டு, பயங்கரவாதம், தலைதூக்குனா உளவுப்படை என்னா செய்யும்னு.....

இப்ப உளவுப்புடை ஒரு புது பயங்கரவாதத்தில இல்ல சிக்கித் தவிக்குது ..

மேல் விபரங்களுக்கு
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html

அன்புடன்
விநாயக்