Friday, August 22, 2008

ராமனுக்கு நிகர் யாருமில்லை

ராமனுக்கு நிகர் யாருமில்லை






இராமயண நாயகர் ராமரைப்பற்றி நெத்தியடியான கருத்துக்களை திரு பழ. கருப்பையா அளித்துள்ளார். பார்க்கலாம் இதற்கு நாத்திகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று

உலக இலக்கியங்களில் ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது என்றார் எழுத்தாளர் பழ. கருப்பையா.

இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காட்டிடும் நடப்பியல் இலக்கியம் கம்பராமாயணம்- என்ற தலைப்பில் எழுத்தாளர் பழ. கருப்பையா வேலூரில் பேசினார். அவர் கூறியதாவது:

மகாபாரதம், கம்பராமாயணம் இரு காப்பியங்களை மிஞ்சிய இலக்கியம் உலகில் கிடையாது. அதிலும் ராமனை மி்ஞ்சும் பாத்திரம் எந்த இலக்கியத்திலுமில்லை.

ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கும் குடும்ப அமைப்பு மாறி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு உருவான காலகட்டத்தில் ராமாயணம் உருவாகிறது.

பெண்ணுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கற்பு நெறி, ஆணுக்கும் இருக்க வேண்டும் என்பதை ராமன் மூலம் காட்டுகிறது கம்ப ராமாயணம். அப்படிப்பட்ட சூழலில் கற்புடை மாதரைக் கவர்ந்து செல்பவருக்கு என்ன கதி நேர்ந்திடும் என்ற எச்சரிக்கையையும் எடுத்துரைக்கிறது கம்பராமாயணம்.

இந்தியக் காப்பியங்கள் நமக்குச் சொல்வது யாதெனில், அறத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் என்பதுதான். மக்களுக்கு அறத்தை போதித்து, நெறியான வாழ்க்கை வாழச்செய்வதுதான் சிறந்த அரசியல்முறையாக இருக்க முடியும்.

ஒரு ஊரில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் காவலர்கள் நூறுபேர்தான் இருப்பார்கள். ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்படும். அதற்குக் காரணம் 99% மக்கள் சட்ட திட்டங்களுக்கும் தர்மத்திற்கும் பயந்து நடப்பவர்கள். அதனால்தான் தர்மத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்கிறேன். அப்போது சட்டம் தானாக பாதுகாக்கப்படும். அதைத்தான் ராமாயணம் போன்ற கதைகள் மூலம் நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

மன்னராட்சி என்ற போதிலும், கண்ணகி அரசவைக்குள் நுழைந்து அரசனை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால், மக்களாட்சியில் எந்தவொரு அமைச்சரையும் மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலைதானே உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்துவர்களாக, அறம் பிழைத்தோராக இருக்கின்றனர்.

ராமனை காட்டுக்குப் போகச்சொன்ன தந்தையையும் காரணமான கைகேயியை மற்றும் பரதனையும் அழிப்பேன் என்று கோபம் கொள்ளும் இலட்சுமணனை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை.... இது விதியின் பிழை... என்று ராமன் அமைதிப்படுத்துவதும்,


ஏர்முனையிலிருந்து விடுபட்ட காளைபோல, பதவியை விருப்புடன் துறக்கும் பண்புநெறியும் அறவாழ்வுக்கு எடுத்துக்காட்டுகள். நம்மை மேல்நிலைக்கு தூக்கும் மாபெரும் இலக்கியம் கம்ப ராமாயணம். அறத்தை போதிக்கும் நூல் கம்ப ராமாயணம்' என்றார் பழ. கருப்பையா.


நன்றி; தட்ஸ்தமிழ்

No comments: