Thursday, August 7, 2008

அமர்நாத் பக்தர்களுக்கு நிலம் வழங்ககோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

தினத்தந்தி சென்னை, ஆக.8-

அமர்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மீண்டும் நிலம் வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் 13-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் கூறினார்.

விசுவ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமர்நாத் பிரச்சினை

அமர்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி செய்துகொடுப்பதற்காக காஷ்மீர் அரசு 40 ஹெக்டேர் நிலம் வழங்கியது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு கொடுத்த நிலத்தை திரும்ப பெற்றுக்கொண்டது. இதனை ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடந்த 35 நாட்களாக எதிர்த்து போராடிவருகிறார்கள்.

அமர்நாத் யாத்ரீகர்களுக்காக காஷ்மீர் அரசு ஒரு அங்குலம் இடம் கூட கொடுக்கமுடியாது என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மீண்டும் வழங்கவேண்டும்

உமர் அப்துல்லாவோ, முஸ்லிம்களோ இந்த நாட்டில் உள்ள கோவில்கள், மலைகள், நதிகள், காட்டுப்பகுதிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இல்லை. இந்துக்கள் எந்த பாதை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஒரு அரசாங்கமோ, ஒரு இயக்கமோ சொல்வதற்கு உரிமை இல்லை.

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதும், மக்கள் அதற்கு அஞ்சாமல் கடந்த 2 நாட்களாக ஒரு லட்சம் மக்கள் சாலைகளில் நின்று போராடி வருகிறார்கள். எனவே காஷ்மீர் அரசு அமர்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நிலத்தை மீண்டும் வழங்கவேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், ஜம்மு காஷ்மீர் இந்துக்களுக்கு ஆதரவாகவும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். இந்த பிரச்சினை சம்பந்தமாக இந்தியா முழுவதும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் இன்றும், நாளையும் மனு கொடுப்பார்கள்.

சாலை மறியல் போராட்டம்

வருகிற 10-ந் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள கவர்னரை சந்தித்து மனு அளிக்கப்படும். 13-ந் தேதி இந்தியா முழுவதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். அன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும். சென்னையில் மறியல் போராட்டம் எந்த இடத்தில் நடத்துவது என்று பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மறியல் போராட்டம் நடத்த தமிழக காவல் துறையினர் அனுமதி வழங்காவிட்டால் தடையை மீறி போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு விசுவ இந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் கூறினார்.

No comments: