Tuesday, August 26, 2008

வேலூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

வேலூர், ஆக.25-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகரை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் வருகிற 3-ந்தேதி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி ஏற்பாடுகளை செய்து வருகிறது. அவற்றில் 70 சதவீத விநாயகர் சிலைகள் 3-வது நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படும். மீதம் உள்ள 30 சதவீத சிலைகள் 5-வது நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 500 இடங்களிலும், வேலூர் மாநகரில் 60 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படும். வேலூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 3-ம் நாளன்று சாமி ஊர்வலம் நடைபெறும்.

சத்துவாச்சாரியில்...

வேலூர் மாநகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 3-ம் நாளன்று காலை 101/2 மணியளவில் சத்துவாச்சாரியில் இருந்து புறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் தனசேகரன் தலைமை தாங்குகிறார். ஊர்வலத்தை தொழில் அதிபர் பிரசாத் தொடங்கி வைக்கிறார். ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம், மெயின் பஜார், தெற்கு போலீஸ் நிலையம், அண்ணா கலையரங்கம் வழியாக செல்கிறது. அண்ணா கலையரங்கம் அருகே அமைக்கப்படும் மேடையில் இருந்து ஊர்வலத்தை பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பிரமுகர்கள் பார்வையிடுகிறார்கள். ஊர்வலம் கோட்டை சுற்றுச்சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றதும் அங்கு கரைக்கப்படும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை புதிதாக பல இடங்களில் வைத்து வழிபட அதிகம் பேர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், புதிய இடத்தில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி மறுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, புதிய இடங்களிலும் வழிபட போலீசார் அனுமதிக்க வேண்டும்.

அமர்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக வழங்கப்பட்ட நிலத்தை அரசு மீண்டும் வழங்கிட வேண்டும். தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு முருகானந்தம் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் தாமோதரன், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=434285&disdate=8/25/2008&advt=2

No comments: