Wednesday, August 6, 2008

தீ விபத்தில் தப்பியது மன்னார்குடி தேர்

திருவாரூர்: மன்னார்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வீடுகள் எரிந்து நாசமாகின. ராஜகோபால ஸ்வாமி கோவில் தேர், யானை வாகன கொட்டகையும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டன; தீயால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, தீயை அணைத்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் பழமை வாய்ந்தது. கோவிலைச் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் குடியிருப்புகள் உள்ளன. மேல வீதியில் உள்ள மூக்கன் என்பவர், வீட்டின் பின்புறம் குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.


அந்த தீ, வீடுகளில் பரவி மேல வீதியிலும், தெற்கு வீதியிலும் இருந்த 35 வீடுகள் சாம்பலாயின. வீடுகளில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால், "உயிர் தப்பினால் போதும்' என்று வீட்டில் உள்ள பொருட்களைக் கூட எடுக்காமல், அனைவரும் தப்பி ஓடினர்.மன்னார்குடி, திருத்துறைப் பூண்டியில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தும், வீதி அகலம் குறைந்த அளவே இருந்ததால் தீ எரிந்த வீதிகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


வீடுகளில் இருந்து வெடித்துச் சிதறிய சிலிண்டர் மற்றும் ஆணி போன்றவை ஆயிரத்து 500 அடி தூரத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பாள் தேர் மற்றும் யானை வாகன கொட்டகையில் விழுந்தன. அவை இரண்டும் பற்றி எரிந்தன. பக்தர்கள், தேரையும், யானை வாகன கொட்டகையையும் தீயில் இருந்து காப்பாற்றினர். கொட்டகையில் கட்டியிருந்த யானை செங்கமலத்தை பாகன் ராஜா, உடனடியாகக் காப்பாற்றி கோவிலில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த தீ விபத்தில், 35 வீடுகள், தேர், யானை வாகன கொட்டகை, ஆக்கிரமிப்பு கொட்டகை, கடை என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. - Dinamalar.

No comments: