Wednesday, August 13, 2008

காஷ்மீர்: தொடரும் கலவரத்தால் ஊரடங்கு, 13 பேர் பலி

புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2008

ஜம்மு: காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காஷ்மீர் முழுவதும் பதட்டம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஸ்ரீநக‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌சி‌றிது நேர‌ம் தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது.கடந்த 13 ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. கோவிலுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலைகளை தடை செய்து போராட்டம் நடத்தினர். இதனால் வெளிச்சந்தையில் தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் உள்பட மற்றொரு பிரிவு போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முஸாராபாத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பயங்கர கலவரம்:

இதனால் காஷ்மீரில் மேலும் பயங்கர கலவரம் மூண்டது. போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தாண்டிப்புரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அரிபால் பகுதியில் 3 பேரும், லஸ்ஜான் பகுதியில் பெண் உள்பட 3 பேரும் இறந்தனர்.

அதேபோல ரைனாவாரி, பகேமதாப், ஜூன்மார், நாகாபால் போன்ற பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

13 ஆண்டுகளில் முதல் முறையாக:

கலவரம் கட்டுக்கடங்காததை அடுத்து காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் காஷ்மீரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அலுவலகங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.இதற்கிடையில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜம்மு பகுதிக்குட்பட்ட கிஸ்த்வார் பகுதியில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் ஊரடங்கு உத்தரவை மீறி பேரணி நடத்தினர். வாகனங்களுக்கு தீவைத்தும், கல்வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இதில் 2 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இருதரப்பிலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் அமர்நாத் பக்தர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஜம்மு மாவட்டத்தில் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை 5 மணிமுதல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. சம்பா மற்றும் உதம்பூர் பகுதிகளில் 5 மணி நேரம் ஊரடங்க உத்தரவு தளர்த்தப்பட்டது. எனினும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பதட்டம் அடங்கவில்லை.

கண்டதும் சுட உத்தரவு:

இந்நிலையில் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரைத் தாக்குபவர்களை க‌ண்டவுட‌ன் சு‌ட்டு‌த்த‌ள்ளவு‌ம் உ‌த்தர‌வு ‌பிற‌ப்‌பி‌க்கப்ப‌ட்டு‌ள்ளது.பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்:இந் நிலையில் அமர்நாத் கோவில் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.கடந்த 2 தினங்களாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.முன்னதாக கடந்த 6ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் குழு காஷ்மீரில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது நினைவு கூரத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

No comments: