Sunday, August 17, 2008

குடும்பம் குடும்பமாய் கொள்ளை போகும் கொல்லிமலை இந்துக்கள்.

கொல்லிமலை!

http://www.kumudam.com/magazine/Jothidam/2008-08-22/pg1.php
தமிழ்த்தாய் இயற்கை என்னும் குழந்தையுடன் கொஞ்சி மகிழும் கொள்ளை அழகுடன் மிளிரும் தெய்வமலை. குன்றுதோராடும் குமரனே `கொல்லிமலை' எனத் திகழ்ந்து தரிசனம் தருகிறான் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறுவர்.

``மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்'' உடற்பிணி, மனப்பிணி மட்டுமின்றி, பிறவிப்பிணியையும் தீர்த்தருளும் திவ்ய மலை கொல்லிமலை!

அதனால்தானோ என்னவோ, இன்றும் ஏராளமான சித்த புருஷர்களும், தவயோகிகளும், ஆத்ம ஞானிகளும் இப்புண்ணிய மலையில் தங்கள் சூட்சும சரீரத்துடன் தவமியற்றி வருகின்றனர்!

ஸ்ரீ அறப்பளீஸ்வரர் திருக்கோயில்!

`கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!' என்பதல்லவா நம் ஆன்றோர்களின் வாக்கு! சங்க காலத்திலேயே சதுரகிரி என்ற புகழ்பெற்ற மலையாகப் பூஜிக்கப்பட்ட இக்கொல்லிமலையில் கோயில் கொண்டு விளங்குகிறான் இறைவன் அறப்பளீஸ்வரன். தர்மதேவதையே இங்கு கொல்லிமலையாக வீற்றிருப்பதால், `அறமலை' என்ற காரணப் பெயர் ஏற்பட்டது காலம் காலமாக.

2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலின் ஈசன் மீது அம்பலவாண கவிராயர் என்ற பெரியவரால் இயற்றப்பட்ட மிகப் பழைமையான நூல் அறப்பளீஸ்வரர் சதகம். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் `அடியவர்க்கு அமுதமே - எமது அருமை சதுரகிரி வளர் அறப்பளீஸ்வர தேவனே' என்று வரும் அடிகளில் பக்திச்சுவையும், இறைவன்பால் அன்பும் வெள்ளப்பெருக்கென பொங்குவதைக் காணமுடிகிறது. இன்றைக்குச் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 7-ம் நூற்றாண்டில் திகழ்ந்த திருஞான சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை திருத்தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கின்றனர். கொல்லிமலை வாழ்மக்களின் குலதெய்வமும்,இஷ்டதெய்வமும் இந்த அறப்பளீஸ்வரர்தான்!

சுயம்புலிங்கம்!

கருவறையில் சிவலிங்கச் சொரூபனாக எழுந்தருளியுள்ள இறைவன் சுயம்புமூர்த்தி - அதாவது தானாகவே தோன்றியவராவார். அம்பிகையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி!

மன்னர்கள் பூஜித்த பெருமை!

தஞ்சை பெருவுடையார் மாபெரும் திருக்கோயிலை எழுப்பித்த ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியாராகிய செம்பியன் மாதேவி இத்திருக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். விஜயநகர அரசர் வேங்கடபதி மற்றும் சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன் ஆகிய மன்னர்களும் இப்பெருமானையும், அம்பிகையையும் தரிசித்துப் பூஜித்துள்ளனர். சங்ககால நூல்களிலும் கொல்லிமலை பற்றிய அரிய குறிப்புகள் உள்ளன.

வந்துவிட்டது சோதனை!

இவ்விதம் இந்து மதத்தின் மிகப் புராதனமான புண்ணிய மலையான கொல்லிமலைக்கும், அதனைச் சுற்றி நிம்மதியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்துவந்த மக்களுக்கும் சென்ற சுமார் ஒரு வருடகாலமாக விபரீதமான சோதனை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லைத் தென் தமிழகத்தின் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கிவரும் கிறிஸ்தவ நிறுவனங்கள், கொல்லிமலையிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், சிற்றூர்கள் ஆகியவற்றிலும், அதிதீவிரமான மதமாற்றத்தில் ஈடுபட்டுவருகின்றன. வெளிநாடுகளிலிருந்து இம்முயற்சிக்கு ஏராளமான பணம் வருவதால், எளிய வாழ்க்கையில் உள்ள மக்களை இடைவிடாத பிரசாரத்தினாலும், பண ஆசை காட்டியும் தீவிர மதமாற்றம் செய்து வருகின்றனர். மக்களின் ஏழ்மை, அன்றாட பிரச்சினைகள், கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன அந்த அமைப்புகள். இதற்குச் சில அரசாங்க அதிகாரிகளும் நேரடியாக உதவி செய்து வருவதைப் பற்றி 31.7.2008 தேதியிட்ட `குமுதம் ரிப்போர்ட்டரி'ல் (பக்.20) ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடை கூடையாக அள்ளிக்கொண்டு போவதுபோல், குடும்பம் குடும்பமாக மூளைச்சலவை செய்யப்பட்டும், பணத்தாசை காட்டியும் இந்த மதமாற்றம் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமுதாயத்தைக் காப்பாற்றும் உரிமை

நமக்கு உண்டு!

எமக்குக் கிறிஸ்தவ மதத்தின் மீதோ அல்லது பிற மதங்களின் மீதோ சிறிதளவும் துவேஷம் கிடையாது.இந்துக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதுமில்லை.

ஆனால், `என் மதம்தான் மதம்! என் மதத்தில் சேர்ந்தால்தான் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்! என் மதத்தில் சேர்ந்தால் பணம் தருவோம்!' என்றெல்லாம் கூறி, மதமாற்றம் செய்வது, இந்து சமூகத்தை அழிக்கும் செயல் ஆகும். இதனை இனியும் ஏற்கமுடியாது.

கொல்லிமலையின் ஒவ்வொரு பகுதியிலும், தனித் தனிக் குழுக்களாகச் சென்று, இந்து மதத்தைப் பற்றி கேவலமாகப் பேசி, மூளைச்சலவை செய்து வருவதும் அனைவருக்கும் தெரியும். இதற்குப் பெயர்தான் 'Secular India!' நமது இந்து மத நெறிமுறைகளைப் போதிக்கும் சத் தர்ம ஆசிரமம், ஞானதீப வித்யாலயம் போன்ற ஆசிரமங்கள் மலைவாழ் குழந்தைகளுக்காகப் பள்ளிகளை நடத்திவருகின்றன. இப்பள்ளியை பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதிகளும் வந்து ஆசீர்வதித்திருக்கிறார்.

இத்தகைய ஆசிரமங்கள் இருக்கும் இடங்களைச் சுற்றிப் புதிது புதிதாக கிறிஸ்தவ தேவாலயங்கள் திடீர் திடீரென்று முளைத்து வருகின்றன. இந்நிலை நீடித்தால், இந்து மதமே இந்த வேத பூமியிலிருந்து அடியோடு அழிந்துவிடும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

மடாதிபதிகள், மதத் தலைவர்கள், இந்து அரசியல் கட்சிகளுக்கு
ஒரு வேண்டுகோள்!

ஏற்கெனவேயே நாம் கூறியுள்ளபடி, பிற மதங்களை நாம் வெறுப்பது கிடையாது. இருப்பினும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு (Secular) என்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இவ்விதம் மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இனியும் நமது மடாதிபதிகளும், மதத் தலைவர்களும், மனசாட்சியுள்ள அரசியல் கட்சிகளும் செயலற்று நிற்பது நம் அழிவை நாமே தேடிக்கொண்டதற்கு ஒப்பாகும்.

'Secular' என்ற சொல் இந்துக்களுக்கு மட்டும்தானா? நான் அமெரிக்காவில் பல கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று பார்த்தபோது, அவர்களது பிரார்த்தனை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில்கூட அதிக கூட்டம் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன். பல தேவாலயங்கள் காலியாகவே இருந்ததையும் பார்த்தேன். சில மதபோதகர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது, `மக்கள் வருவது குறைந்து கொண்டு வருகிறது' என்றனர்.

அவர்கள் நாட்டில் பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு மதத்தை நம் மக்கள் மீது திணிப்பதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது!

ஆதலால், நமது மதத் தலைவர்கள் இனியாவது தங்களது சிறு கூட்டிலிருந்து வெளிவந்து, ஏழை மற்றும் அடித்தட்டு மக்களிடம் சென்று நம் இந்து தர்மநெறிமுறைகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். நமக்குள் வேற்றுமை சிறிதளவும் இருக்கக்கூடாது. நாம் இருப்பதா அல்லது அழிவதா என்ற நிலை வந்துவிட்டது. அன்றே ஸ்வாமி விவேகானந்தர் எச்சரிக்கை செய்தும், அதனைப் புறக்கணித்ததன் பலனை மாபெரும் இந்து சமூகம் இன்று அனுபவித்து வருகிறது. விழித்தெழ வேண்டிய தருணம் இது! இனியும் உறங்க வேண்டாம்!

இதே சிந்தனையில் உங்கள்,

ஏ.எம்.ஆர்.

No comments: