Thursday, August 7, 2008

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ள வங்கதேசத்தவர்கள்: உளவு நிறுவனங்கள் கடும் கவலை

ஆமதாபாத்: இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வங்க தேசத்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களையும் கவலை அடையச் செய்துள்ளது. இப்படி ஊடுருவியவர்களை, பயங்கரவாத அமைப்புகள் தங்களது சதி வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக உளவு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது:

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி, இந்திய பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்ந்து, வங்க தேசத்தின் பல பகுதிகளை மூழ்கி விடும் அபாயம் உள்ளது.

அப்படி சில பகுதிகள் கடலில் மூழ்கினால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நிச்சயமாக இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவர். தற்போது இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி, வசிக்கும் வங்க தேசத்தவர்களின் எண்ணிக் கை ஐந்து கோடி. இந்த எண்ணிக் கை அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். இப்போது ஆமதாபாத்தில் மட்டும், சட்ட விரோதமாக ஊடுருவிய ஒரு லட்சம், வங்க தேசத்தவர்கள் உள்ளனர். பெங்களூரு மற்றும் ஆமதாபாத்தில் சமீபத்தில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. சூரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், தாங்களே காரணம் என, "இந்தியன் முஜாகிதீன்" என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சதி வேலைகளை செய்ய அந்த அமைப்பு 200க்கும் மேற்பட்டோரை பயன்படுத்தியுள்ளது. அவர்கள் எல்லாம் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய நபர்களே. வங்கதேசத்தவர்கள் எண்ணிக் கை இந்தியாவில் அதிகரிப்பதால், இங்கு மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தான் உட்பட உலகில் சர்ச்சைக்கு இடமான பல நாடுகளில் நடந்த சதி செயல்களின் பின்னணியில் வங்க தேசத்தவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் சுதந்திரமான சமுதாயத்தை கொண்டிருந்த வங்கதேசம், கடந்த 10 ஆண்டுகளில் பழமைவாதிகள் மற்றும் மத பயங்கரவாதிகள் நிறைந்த நாடாக மாறி விட்டது. இப்படி பழமைவாத எண்ணங்களைக் கொண்டவர்கள் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக ஊடுருவது தொடர்ந்து நடந்தால், அது நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயமாக அச்சுறுத்தலாகவே அமையும். அத்துடன் நாட்டிற்கு எதிரான இந்தச் சக்திகளை இனம் கண்டறிவதும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சிரமமானதாக இருக்கும்.


நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நாம் சுமூகமான உறவு கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கதேசத்தவர்கள் ஊடுருவலை கட்டுப்படுத்த தவறினால், அது ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பல குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழ காரணமாகி விடும்.வங்கதேசத்தில் 2005ம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்பிற்கு குறைவான சக்தி கொண்ட வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்புக்கு பின், 300க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டன.


அதேபோன்ற நிலைமைதான் சமீபத்தில் இந்தியாவில் காணப்பட்டது. அதாவது ஆமதாபாத் குண்டு வெடிப்பை தொடர்ந்து, சூரத்தில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்க தேசத்தவர்களை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., எளிதில் இனம் கண்டு பிடிப்பதோடு, குறைவான செலவில் சதி வேலைகளை அரங்கேற்ற அவர்களை பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, வங்க தேசத்தவர்களின் ஊடுருவலை தடுப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், அது பேராபத்தாக முடியும். இவ்வாறு உளவு நிறுவன அதிகாரிகள் கூறினர்.

செய்தி: தினமலர்

No comments: